கோவை : ஐந்திணை என்ற அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, தலைவர் தேவப்பிரகாஷ் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழு, கஜா புயல் பாதித்த பகுதிகளில் பட்டுக்கோட்டை, பேராவரணி, வடக்காடு உள்ளிட்ட ஆறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளைக் கடந்த 4-ம் தேதி சந்தித்துள்ளது.
கோவை : ஐந்திணை என்ற அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, தலைவர் தேவப்பிரகாஷ் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழு, கஜா புயல் பாதித்த பகுதிகளில் பட்டுக்கோட்டை, பேராவரணி, வடக்காடு உள்ளிட்ட ஆறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளைக் கடந்த 4-ம் தேதி சந்தித்துள்ளது.
மேலும், அப்பகுதி விவசாயிகளிடம் கலந்தாலோசனை கூட்டம் நடத்தி, குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், மக்களுக்காக களப்பணியாற்றவும் முடிவு செய்துள்ளது.

ஐந்திணை அமைப்பு என்பது என்ன..? விவசாயிகள் உங்களிடம் என்னென்ன கூறியிருக்கிறார்கள்..? ஐந்திணை செய்யவிருப்பது என்ன..? என்பது போன்ற கேள்விகளை அதன் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதியிடம் முன் வைத்தது சிம்ப்ளிசிட்டி. அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:-
நடந்து முடிந்த கலந்துரையாடல் கூட்டங்கள் மூலமாக டெல்டா பகுதி விவசாயிகளின் சொல்லிலடங்கா துயரங்களை அறிந்துகொள்ள முடிந்தது. புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீளாமல் இருப்பவர்கள் விவசாயிகள் தான். பொதுமக்கள் மற்றும் அரசு இணைந்து மேற்கொண்ட நிவாரணப் பணிகள் மூலம் டெல்டா பகுதி மக்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் இருப்பிட வசதிகள் போதுமான அளவு கிடைத்துள்ளது.
ஆனால், விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின் துயர் தீர்ந்தபாடில்லை. புயலால் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட 90 சதவீத தென்னை மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனை தினந்தோறும் பார்த்து வேதனையடைகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.
சாலையோரம் விழுந்த மரங்களை சில தன்னார்வலர்கள் அகற்றிவிட்டனர். ஆனால், வரப்புகள் மற்றும் தோட்டங்களில் சாய்ந்துள்ள மரங்களை அகற்ற அதிக மனித சக்தியும், பணமும் தேவைப்படுகிறது. இந்த சக்திகள் விவசாயிகளிடம் இல்லை.
வாழ்வாதாரம்..?
வயல்வெளிகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றாமல் இருப்பதால் அப்பகுதிகளில் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் விழுந்த மரங்களை பார்த்து பார்த்து சலிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள், விவசாயத்தை விட்டுவிட்டு சிவகாசி, திருப்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று கூலி வேலை செய்து பிழைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மா மரம் மற்றும் முந்திரி மரங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இதே நிலைதான். மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும் விவசாயிகளின் துயர் தீர்க்கும் விதமாக, துணை ராணுவத்தை அனுப்பி விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். விவசாய பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசு ஒன்றிணைந்து உடனடியாக அப்பகுதியில் விவசாயம் மேற்கொள்வதற்கான வழிவகையை செய்து கொடுக்க வேண்டும்.
புயல் பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை குறைந்தது 2 ஆண்டுகளுக்கு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தனியார் மற்றும் அரசு என்று எந்த கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், பொருளாதார ரீதியாக டெல்டா பகுதி மக்கள் மிகவும் பின் தங்கிவிட்டனர். மேலும், எதிர்கால வருமானத்திற்கும் வழியில்லாத சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
ஐந்திணை அமைப்பு :
நாங்கள் 8 பேர் இணைந்து ஐந்திணை அமைப்பை தொடங்கியுள்ளோம். இந்த அமைப்பில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை இணைத்து விவசாயிகளுக்காக உதவ முடிவு செய்துள்ளோம். டெல்டா பகுதியில் உள்ள 3 கிராமங்களைத் தத்தெடுக்க எங்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. கிராமங்களில் மக்களுக்கு மரக்கன்றுகளையும், காய்கறி விவசாயத்திற்கான உதவிகளையும் செய்ய உள்ளோம்.
குறுகியகால விவசாயப் பணிகளை மேற்கொள்ள விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் அமைப்பு மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்கு அனுப்ப உள்ளோம். தேவைப்பட்டால் முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
இந்த அமைப்பு, விவசாயிகளுக்காக மட்டுமல்லாது கல்வி, பொருளாதார மேம்பாடு, வளர்ச்சி மற்றும் பொதுப்பணிகளை மேற்கொள்ளும். இந்த அமைப்பு எந்தக் கட்சியையும் சார்ந்ததல்ல. ஐந்திணை அமைப்பு அரசியலில் போட்டியிடாது. அதே நேரத்தில், தேர்தலைப் புறக்கணிக்கவோ அல்லது நோட்டாவுக்கு வாக்களிக்கக் கூறி வலியுறுத்தவோ செய்யாது. மக்களுக்கு உதவ நினைக்கும் எந்தக் கட்சி உறுப்பினரும் எங்கள் அமைப்பில் இணைந்து கொள்ளலாம். ஐந்திணை அமைப்பில் இணைய விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளாலாம், இவ்வாறு அவர் கூறினார்.