கோவை : கோவையில் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை : கோவையில் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் ரூ.1000 பரிசுத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் 10,04,532 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது :- தமிழர் பண்டிகை பொங்கல் திருநாள், அறுவடைத் திருநாளாகவும், உலகத்து மக்களுக்கு உணவளிக்கம் உழவர்களைப் போற்றிடும் திருநாளாகவும், விவசாயிகள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாளாகவும் விளங்குகின்றது. பொங்கல் பண்டிகையை சாமானிய மக்களும் சிறப்போடு கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் மட்டும் இப்பரிசுத் தொகுப்புகள் வழங்க ரூ. 107,48,34,210 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலத்தில் இல்லாத வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட சாலைகளால் போக்குவரத்து விபத்துகள் பெருமளவில் தற்போது குறைந்துள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ள பகுதிகளில் உயர்மட்டப்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றது. 3ஆம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் தடையில்லா குடிநீர் சேவை, வரும் 50 ஆண்டுகள் வரை வழங்க இயலும். இத்திட்டங்கள் அனைத்தும் மக்கள் பயன்பெறும் வகையில், உடனுக்குடன் செயல்படுத்தப்படுகின்றது.
மேலும், கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக செயல்படுத்த முடியாமல் இருந்த அப்பகுதி மேம்பாலப் பணிகளும் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது, இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ராமநாதபுரம், சுகுணாபுரம், குனியமுத்தூர், சுண்ணாம்பு காளவாய், கரும்புக்கடை, சலிவன் வீதி, செல்வபுரம், தெலுங்குபாளையம், பூலுவப்பட்டி, ஆலாந்துரை, தொண்டாமுத்தூர் மற்றும் கோவைப்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், வி.சி. ஆறுக்குட்டி, அம்மன் கே. அர்ச்சுனன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆ.பழனிசாமி, துணை ஆணையர் காந்திமதி உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலாக குன்னுார் ரயில்வே கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு துவக்க விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், "நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 318 முழுநேர நியாயவிலை கடைகளும். 89 பகுதிநேர கடைகள் என மொத்தம் 407 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. இவைகளில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 349 ரேசன் அட்டைதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கோடியே 67 லட்சத்து 98 ஆயிரத்து 112 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பும். 21 கோடியே 13 லட்சத்து 59 ஆயிரம் ரொக்கம் என 23 கோடியே 80 லட்சத்து 95 ஆயிரத்து 215 ரூபாய் அளவிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் தொகுப்பு நாளை முதல் 12-ந் தேதி வரை வழங்கப்படும்," இவ்வாறு கூறினார்.