கோவை : கோவையில் நடைபெற்ற வேளாண் திருவிழா 2019-ன் ஒரு பகுதியாக நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கோவை : கோவையில் நடைபெற்ற வேளாண் திருவிழா 2019-ன் ஒரு பகுதியாக நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

வேளாண்மை துறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எஸ். செங்கோடா கவுண்டர் கல்வி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து 3 நாட்கள் நடக்கும் வேளாண் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தன. இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதும், இயற்கை வேளாண்மை சார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும்.

அதன்படி, எல்.அன்.டி பைபாஸ் சாலையில் உள்ள சக்தி கல்லூரியில் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தக் விழாவின் முதல்நாளில், 108 பசுக்களுடன் கோ-மாதா பூஜை நடந்தது. பின்னர், 2-வது நாளில் பசுமாடு, காளைகள் மற்றும் எருமை மாடு உள்ளிட்ட கால்நடைக் கண்காட்சி மற்றும் பரிசுப் போட்டியும் நடைபெற்றது. நாட்டு நாய்கள், குதிரை, கிடா மற்றும் சண்டை சேவல் என 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்ற கண்காட்சிகளும் நடந்தது.
இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக விவசாயத்தை மேம்படச் செய்யும் வகையில், கண்டுபிடிக்கப்பட்ட புதிய அறிவியல் தொழில்நுட்ப மென்பொருள்கள், கருவிகள் வேளாண் வர்த்தகக் கண்காட்சியில் இடம்பெற்றன.
இதைத் தொடர்ந்து, வேளாண் திருவிழாவின் கடைசி நாளான இன்று 'இயற்கைக்கு ஏன் மாற வேண்டும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இயற்கை விவசாயிகளான சுந்தரராமன் ஐயர் மற்றும் மதுராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ரேக்ளா போட்டி நடைபெற்றது. இதில், 300-க்கும் அதிகமான ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. 100 மீட்டர், 200 மீட்டர், 300 மீட்டர் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 8 கிராம் தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக 6 கிராம் தங்க நாணயமும், மூன்றாம் பரிசாக 4 கிராம் தங்க நாணயமும் மற்றும் வெற்றிக் கோப்பைகள் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

பட்டயக்கணக்காளர் (Chartered Accountant) சரவண்குமார், ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர் எஸ். தீபன் தங்கவேலு ஆகியோர் ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

3 நாட்கள் நடந்து முடிந்த இந்த வேளாண் திருவிழாவை சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், மாணவ, மாணவியரும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.