திண்டுக்கல் : பழனியில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கிய உணவில் புழுக்கள் இருந்ததால், மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் : பழனியில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கிய உணவில் புழுக்கள் இருந்ததால், மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (40). இவரது மனைவி சுப்புலட்சுமி(38). பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாததால், சிகிச்சைக்காக பழனியில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தில் கடந்த ஆறு மாதங்களாகத் தங்கியுள்ளனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சுப்புலட்சுமிக்கு மருத்துவமனை சார்பில் இன்று காலை வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கர்ப்பிணியின் கணவர் சதீஷ் தெரிவித்ததாவது:- திருமணமாகிப் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாததால் பழனியில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறோம். கடந்த 6 மாதமாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறோம். மருத்துவமனை சார்பில் வழங்கப்படும் உணவையே சாப்பிடுகிறோம். தற்போது மனைவி சுப்புலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை எனது மனைவிக்கு வழங்கிய உணவில் புழுக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டால் அலட்சியமாகப் பதில் அளிக்கிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்ற பொறுப்புணர்வு இல்லாமல் மிகவும் அலட்சியமாக, தவறு என்று தெரிந்தே மனசாட்சியில்லாமல் குற்றம்புரியும் இந்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, கர்ப்பிணி பெண் அளித்தப் புகாரின் கீழ் மருத்துவமனையில் உணவு தரக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவமனை சமையலறைக் கூடம் மற்றும் கேண்டினில் இருந்து காலாவதியான உணவுப்பொருட்கள் மற்றும் கெட்டுப்போன மளிகைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இதுநாள் வரை சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகளுக்கு தரமற்ற உணவு வழங்கிய மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.