கோவை : கேரளாவில் பெண்கள் ஐயப்பன் தரிசனம் செய்ததைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை : கேரளாவில் பெண்கள் ஐயப்பன் தரிசனம் செய்ததைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை மீறி அங்கு சென்றவர்களை தடுக்கும் முயற்சியில் போராட்டகாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெகுகாலமாக கடைபிடிக்கும் பாரம்பரித்தை காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்து, பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வருவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து மற்றும் மலபுரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் வழிபாடு செய்தனர். இந்த தகவல் வெளிவந்ததையடுத்து, நேற்று கோவில் நடை சாத்தப்பட்டு சுத்திகலசம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் தான் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து, கோவிலின் பாரம்பரியம் கெட காரணமாக இருப்பது கேரளாவில் இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி தான் எனவும், அதனைக் கலைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இன்று கேரளாவில் முழு அடைப்பிற்கு பல்வேறு கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனால், கேரளாவிற்கு செல்லும் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து சாலை மறியலிலும், கோவை ரயில் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள ரயில் மீது ஏறியும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனிடையே, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோலவே, பா.ஜ.க வை சேர்ந்த வழக்கறிஞர்கள் கேரள அரசைக் கண்டித்து நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவையில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.