கோவை : மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னை மர கருப்பட்டி விலை உயர்ந்துள்ளதால், அதனைத் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னை மர கருப்பட்டி விலை உயர்ந்துள்ளதால், அதனைத் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
பெரும்பாலும் பனைமரங்களில் இருந்தே கருப்பட்டி தயாரித்து வந்தனர். இந்நிலையில், குறைந்து வரும் பனைமரங்களில் எண்ணிக்கையின் காரணமாக தென்னை மரத்தில் இருந்து கருப்பட்டி தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னை மரங்களைப் பயன்படுத்தி கருப்பட்டி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஜடையம்பாளையத்தில், விவசாய தோட்டங்களில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் இருந்து தொழிலாளர்கள் கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தென்னை மரத்திலும் காலையில் இருந்து தொழிலாளர்கள் மரம் ஏறி பானையில் உள்ள பதனீரினை எடுத்து வருகின்றனர்.
அதன் பின்பு, பதனீரை ஒரு பெரிய கொப்பரையில் ஊற்றுகின்றனர். தொடர்ந்து சுமார் 8 மணி நேரம் வரையிலும், அதனை விறகு அடுப்பில் நன்றாகக் காய்ச்சி பதப்படுத்துகின்றனர். இதையடுத்து, ஒரு மணி நேரம் காய்ச்சிய பதனீரை ஆறவைத்து, அதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள அச்சுகளில் ஊற்றுகின்றனர். அந்த அச்சில் நன்கு பொருந்திய பின் அக்கருப்பட்டியை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
மேலும், கடந்த மாதம் வரை ஒரு கிலோ கருப்பட்டி ரூ.50 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகி வந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிலோ ரூ.110 வரை விற்பனையாவதால் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.