திருப்பூர் : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் வண்ணக் கோலப் பொடி விற்பனை களைகட்டியுள்ளது.
திருப்பூர் : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் வண்ணக் கோலப் பொடி விற்பனை களைகட்டியுள்ளது.
தமிழர்களின் முன்னணி பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை, கிராமப்புறங்கள் மட்டுமல்லாது, நகர் புறங்களிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் போது, அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் புதுவிதமான கோலமிட்டு மகிழ்வர். பெண்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் வண்ணக் கோலங்கள் மற்றும் அழகான கோலங்கள் தங்கள் வீடுகளில் போடப்பட்டதாக பெருமை பேசும் வழக்கமும் இருந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் இந்த காலத்து இளைஞர்கள் மூழ்கி விட்டதால், பாரம்பரிய வழக்கங்கள் மறைந்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டியும், மார்கழி மாதத்தை முன்னிட்டும் திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள வண்ண கோலப் பொடி விற்பனை கடைகளில் குவியும் கூட்டம் பாரம்பரியத்தை நினைவுபடுத்துவதாகவே அமைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக முளைத்துள்ள வண்ணப் பொடிகள், கோலமாவு விற்பனையானது சூடு பிடித்துள்ளது. வண்ணப் பொடிகளும் ரூ. 5 முதல் கிடைப்பதால் பெரும்பாலானோர் வாங்கி செல்கின்றனர். ஆண்டு முழுவதும் தயாரிக்கப்படும் வண்ணப் பொடிகள் மார்கழி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என 35 நாட்கள் மட்டுமே விற்பனை என்ற நிலையிலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை அதிகரித்திருப்பது வண்ண பொடிகள் தயாரிப்பாளர்கள், விற்பனையார்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.