கோவை : புத்தாண்டை முன்னிட்டு சாலையில் நேரும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வண்ணம் கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்களில், இன்று இரவு முதல் வாகனங்களை இயக்கத் தடை விதித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை : புத்தாண்டை முன்னிட்டு சாலையில் நேரும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வண்ணம் கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்களில், இன்று இரவு முதல் வாகனங்களை இயக்கத் தடை விதித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு புதிய ஆண்டான 2019 -ம் ஆண்டு தொடங்கவுள்ளது. இதையடுத்து, பலவகையான புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். இதையொட்டி இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது, மது போதையில் வாகனங்களை ஓட்டுவது வாடிக்கையாக நடைபெறும். மேலும், மேம்பாலங்களில் இருசக்கர வாகனங்களைப் பந்தயத்தில் செல்வது போல வேகமாக ஓட்டிச் செல்லுவதாலும் பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க கோவை மாநகர காவல் துறையினர் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, கோவை மாநகரில் உள்ள காந்திபுரம் மேம்பாலம், வடகோவை மேம்பாலம், உக்கடம் மேம்பாலம், அவினாசி சாலையில் உள்ள டிஎஸ்பி மேம்பாலம் ஆகிய மேம்பாலங்களில் இன்று இரவு 10.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரை எந்த வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. இதற்காக அனைத்து மேம்பாலங்களும் தடுப்புகளால் மூடப்பட உள்ளது.
மேலும், கோவை மாநகரம் முழுவதும் போலீசார் , 35 பேட்ரோல் பைக் மற்றும் 23 ஜீப்புகளில் விடியும் வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல, கோவை மாநகரில் உள்ள 6 இந்துக்கோயில்கள், 62 தேவாலயங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் மற்றும் முக்கிய சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதனிடையே, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் கைது செய்யப்படுவர். மறுநாள் காலை போதை தெளிந்த பின்னர் தான் அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.