கோவை : தடாகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை பெண்ணொருவர் தைரியமாக அரிவாளுடன் துரத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை : தடாகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை பெண்ணொருவர் தைரியமாக அரிவாளுடன் துரத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தடாகம் அருகேயுள்ள பன்னிமடை ஸ்ரீவாரி கார்டனை சேர்ந்தவர் சீனிவாசபிரபு (51). இவர் மருந்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்னர் தாராபுரம் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த மர்மநபர்கள், 10 பவுன் நகையை திருடினர். இதைக் கண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த கயல்விழி என்பவர் அரிவாளுடன் மர்மநபர்களை விரட்டினார்.
இதனால், மர்மநபர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பினர். இதைத்தொடர்ந்து, தடாகம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பெண் ஒருவர் அரிவாளுடன் கொள்ளையர்களை துரத்திய சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல, நரசிம்மநாயக்கன்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்தவர் மாயாண்டி (51). இவர், பழவியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் வெளியூர் சென்று விட்டு திரும்பிய நிலையில், வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 11 சவரன் நகை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, மாயாண்டி அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.