கோவை : கோவையில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டத்தில் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் 2388 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களுடன் ரூ.2838 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கோவை : கோவையில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டத்தில் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் 2388 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களுடன் ரூ.2838 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் 2019 -ம் ஆண்டின் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டினை முன்னிட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
இதையடுத்து, நிகழ்ச்சியில் 2388 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களுடன் ரூ.2838 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும், ரூ.5.01 கோடி மதிப்பில் 44 புதிய தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள், தமிழகத்தில் தொழில் புரட்சி ஏற்படுத்தும் வகையில், 2015 -ம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். இதையடுத்து, தமிழகத்தின் சிறப்புகளை உலகறியச் செய்யும் வகையில், தொழில் முதலீடுகளை ஈர்க்க தற்போதைய முதலமைச்சர் தலைமையிலான அரசு, உலக முதலீட்டாளர்களின் 2 -வது மாநாட்டை 2019 -ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன் முன்னோட்டமாக இத்துறையில் உள்ள முதலீட்டிற்கான வாய்ப்புகள் குறித்தான சிறப்பு நோக்குத் கூட்ட கருத்தரங்கை இன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023 -ன் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் சிறந்த ஆளுமை கொண்ட மாநிலமாக மாற்றுவதே ஆகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட 98 பெரும் தொழில் நிறுவனங்களில், 68 நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கிவிட்டன. இதன் காரணமாக, ரூ.62,738 கோடி அளவிலான முதலீடுகளும், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பும், பல லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாவட்டம், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சங்கமாக விளங்குகின்றது. தமிழ்நாட்டில் பதிவு பெற்று இயங்கிவரும் சுமார் 15 லட்சத்திற்கும் மேலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிற்கும், வேலை வாய்ப்பிற்கும் பெரும் பங்காற்றி வருகின்றன. இம்மாவட்டத்தில் மட்டும், இதுவரை 74,885 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. இங்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அதிக அளவில் தொழில் தொடங்க ஈர்க்கும் வகையில், இச்சிறப்பு நோக்குக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, முன்னோட்டமாகக் கோவை கொடிசியாவில் தமிழக அரசுடன் இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பினர் முதலீட்டாளர்களுக்கான தொழில் கருத்தரங்கை நடத்தினர். அதன் பின்னர், கோவை மாவட்டத்தில் 2,388 நிறுவனங்கள், ரூ.2838 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த வரிசையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 391 நபர்களுக்கு ரூ.228.28 கோடி முதலீட்டில் தொழில்கள் தொடங்க ரூ.57.07 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலமாக 229 நபர்களுக்கு ரூ.9.92 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் வாயிலாக, கடந்த 8 ஆண்டுகளில், 6415 தொழில் முனைவோர்கள் ரூ.168.04 கோடி அரசு மானியத்துடன் ரூ.651.60 திட்ட மதிப்பீட்டில் வங்கிக் கடனுதவி பெற்று தொழில் தொடங்கியுள்ளனர்.
மேலும், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கும், புதிதாகத் தொழில் துவங்குபவர்களுக்கும் அதிமுக அரசு, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்து, என்றென்றும் துணை நிற்கும்," என்றார்.
இந்நிகழ்ச்சியில் தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் டி.பி.ராஜேஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ச்சுனன், திரு.ஆர்.கனகராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.