கோவை: கோவையில் நடைபெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோவை: கோவையில் நடைபெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வரதராஜபுரம் சாய் விவாக திருமண மண்டபத்தில் கடந்த இரண்டு தினங்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாளான இன்று நிர்வாகிகள் கட்சி தொண்டர்களுடன் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து, காடுவெட்டி குரு மறைவுக்கு இரங்கல், 7 தமிழர்களைப் புத்தாண்டில் விடுவித்தல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கடுத்ததாக, செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒருமித்த கருத்துள்ள கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகளை எடுக்க நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரங்களைப் பொதுக்குழு வழங்கியுள்ளது. நாட்டின் நலனைக் கருதி பா.ம.க நல்ல முடிவை எடுக்கும்.

சமீப காலமாக ஊடகங்களில் சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. இதனை மக்கள் நம்பக்கூடாது. தமிழக உரிமையை மத்திய அரசு வஞ்சிக்கிறது. காவிரி நீர் பங்கீடு, முல்லை பெரியார் அணை விவகாரம், நிவாரணம் போன்ற அனைத்து விதங்களிலும் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. மேலும், இலங்கையில் தமிழர்கள் படுகொலை, மீனவர் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளில் தமிழகத்திற்கு பா.ஜ.க-வும் காங்கிரசும் துரோகமே இழைத்தது.
அவினாசி-அத்திக்கடவு திட்டத்தைச் செயல்படுத்த ரூ.3523 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது நிதி ரூ.1532 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அரசு மிக விரைவில் நடைமுறைப்படுத்தி மக்களின் 60 ஆண்டு கனவை நிறைவேற்ற வேண்டும்.
வரும் புத்தாண்டில் சட்டமன்றம் கூடும் என்று தெரிகிறது. அப்போது காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்காகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளேன்." என்றார்.
"காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் தி.மு.க என்று ஒரு புறமும், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஒரு புறமும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ள நிலையில், பா.ம.க தனித்துவிடப்பட்டதாக உள்ளது. கூட்டணி அமையுமா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு "பொறுத்திருந்து பாருங்கள்" என்ற வசனத்தைப் பதிலாக கூறிவிட்டு புறப்பட்டார் அன்புமணி.