திண்டுக்கல் : பழனி கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக போலீசார் முன்னிலையிலேயே அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் : பழனி கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக போலீசார் முன்னிலையிலேயே அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள வட்டார வேளாண்மைப் பொறியியல் பணிக் கூட்டுறவு மையத்தில் காலியாக உள்ள இரண்டு நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் பணி நடந்தது. இரண்டு உறுப்பினர் பதவியில் தாழ்த்தப்பட்டோருக்கான ஒரு பதவிக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள ஒரு பதவிக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த கருப்புசாமி, செல்வக்குமார், அப்பாஸ் மந்திரி, சரோஜா ஆகிய நான்கு பேர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், போட்டியின்றி தேர்வு செய்யும் வகையில் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், ஓ.பி.எஸ். அணியினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பாக நகர செயலாளர் முருகானந்தமும், ஓ.பி.எஸ். அணி சார்பாக மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் முன்னிலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் போலீசார் செய்வதறியாது நின்றனர். தொடர்ந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
அ.தி.மு.க.வின் இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலால் கூட்டுறவு சங்க தேர்தல் நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.