கோவை : திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கோவை மாநகராட்சி முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை : திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கோவை மாநகராட்சி முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், பள்ளி மைதானங்களில் குப்பைகளை கொட்டி, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதி மக்களும் தனித்தனியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சியிடம் மனுக்களையும் அளித்துள்ளனர்.
இந்த சூழலில், குடியிருப்பு பகுதிகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல், மாற்று இடங்களில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோவை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோவை மாநகராட்சிக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 400 குடியிருப்புகளின் வசிக்கின்ற 2,000 பொதுமக்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், கோவை மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் 20 லட்சம் மக்களை நிரந்தர நோயாளிகளாக்கும் இந்தக் குப்பை கிடங்கு திட்டத்தை கண்டித்து மாநகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றுவது, குப்பை கிடங்கு வேலை தொடங்கினாலும், கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது, மேலும், 100 வட்டங்களின் மக்களை ஒன்று திரட்டி 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, இதன் ஒருபகுதியாக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செந்தில் நகர், கார்த்திக் நகர் மற்றும் கருப்பசாமி நகர் லே-அவுட் குடியிருப்போர் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்ற வேண்டும், திட்டத்தைக் கைவிடவில்லை எனில், முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேற்கண்ட லே-அவுட்களில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது குறித்து செந்தில் நகர் லே-அவுட் குடியிருப்பின் செயலாளர் சர்மிளா பிரின்ஸ் கூறுகையில், "ஜனவரி 1-ம் தேதி எங்கள் பகுதியில் குப்பை மேலாண்மை திட்டத்திற்கான பணிகள் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகராட்சியின் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் நிலையை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதேநிலை, இங்கு நிலவ நாங்கள் விரும்பவில்லை. இத்திட்டத்தை கோவை மாநகராட்சி கைவிட வில்லை எனில், அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், இவ்வாறு கூறினார்.