கோவை : விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் 10-வது நாளாக நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
கோவை : விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் 10-வது நாளாக நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் 8 மையங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் 10-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. காத்திருப்பு போராட்டம் நடைபெறும் மையத்தின் ஒரு பகுதியில் 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் இன்று சுல்தான் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, விவசாயிகளின் உண்மை நிலையைப் புரிந்து விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதை கைவிட்டு, நிலத்திற்கு அடியில் (புதைவழிதடம்) மின்பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், "தமிழகத்தில் தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு திட்டங்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விவசாயிகளின் எண்ணங்களைக் பிரதிபலிக்காத அரசாக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மேகதாது விவகாரம் ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கையில், தற்போது விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலமாக இத்திட்டத்தைக் திணிக்க பார்க்கிறார்கள்.
கேபிள் மூலமாக இத்திட்டத்தை மாற்றுவது அவசியம். அவசர நடவடிக்கைகள் எடுக்க அரசு முன் வரவேண்டும். உண்ணாவிரதம் இருக்கின்ற விவசாயிகளின் நிலையை அரசு உணர வேண்டும். மாற்றான் தாய் மனப்பான்மையை விவசாயிகள் மத்தியில் மத்திய, மாநில அரசுகள் காட்டக்கூடாது. விவசாயிகளில் வாழ்வாதாரத்தைக் காக்க மாநில அரசுக்கு முழு பங்கு உண்டு. சுமூக முறையில் இந்தப் பிரச்சினையை தீர்க்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளிபாளையத்தில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் காத்திருப்பு போராட்டம் திடலுக்கும் சென்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்தார்.
இதனிடையே, அங்கு 4-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளில்,தாராபுரம் பகுதியினைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 10-வது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்திலும், 4-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், அரசின் பிரதிநிதிகளோ, அதிகாரிகளோ தங்களை இதுவரை சந்திக்கவில்லை. எங்களை பரிசோதிக்க அரசு மருத்துவர்களை கூட நியமிக்கவில்லை. மேலும், அரசு தங்களது போராட்டத்திற்கு செவி சாய்க்கும் வரை தொடர் உண்ணாவிரதம், சாகும் வரை உண்ணாவிரதமாக தொடருவோம்," இவ்வாறு அவர் கூறினார்.