கோவை : 25 மாணவ, மாணவிகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை மூடும் தமிழக அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வரும் 27-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கோவை : 25 மாணவ, மாணவிகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை மூடும் தமிழக அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வரும் 27-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
சுமார் 50 லட்சம் ஏழை மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 42,000 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 90,000-க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், 25 மாணவ, மாணவிகளுக்கும் குறை வான எண்ணிக்கையில் பயனடைந்து வரும் சத்துணவு மையங்களை மூடிவிட்டு, அந்த மையங்களில் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் இருந்து உணவு சமைத்து பரிமாற சமூகநலத் துறை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, 25 மாணவ, மாணவிகளுக்கு குறைவான எண்ணிக்கை உள்ள மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 8,000 மையங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 25-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 150 பள்ளிகளில் இருக்கும் சத்துணவு மையங்களை மூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, சமூக நலத்துறையின் இந்த முடிவால் மாணவர்களும், சத்துணவு ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சத்துணவு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
"தமிழக அரசின் இந்த உத்தரவால், சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமல்லாது, ஏழைக் குழந்தைகளின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்," என்கிறார் சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி.