கோவை : செல்வபுரம் அருகே பணி முடிந்து சென்று கொண்டிருந்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் விபத்தில் சிக்கி பலியானார்.
கோவை : செல்வபுரம் அருகே பணி முடிந்து சென்று கொண்டிருந்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் விபத்தில் சிக்கி பலியானார்.
செல்வபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம். இவர் 1981-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் இன்று மதியம் பணி முடிந்து காவல் நிலையத்தில் இருந்து தனது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாதம்பட்டி அருகே உள்ள எஸ்.ஆர். பெட்ரோல் பங்கு எதிரே பெட்ரோல் பங்கினர் வைத்துள்ள விளம்பர டிவைடரில் மோதி ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.

அப்போது, அந்த வழியே குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர் ஒருவர், தனது குடும்பத்தினரை விபத்து நடந்த இடத்தில் இறக்கி விட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த போலீசாரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கொடுக்க மறுக்கவே உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து பரிசோதித்ததில், காவலர் வழியிலேயே பலியானது தெரியவந்தது.

இதையடுத்து, இவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கிற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்த காவலர் எம்.ஜி.ஆர்., முதலமைச்சராக இருந்தபோது பாதுகாப்பு காவலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.