கோவை : தடாகம் அருகே காட்டு யானைகளை ஜே.சி.பி. இயந்திரத்தைக் கொண்டு விரட்டிய சம்பவம் பொதுமக்களை அதிருப்தியடையச் செய்தது.
கோவை : தடாகம் அருகே காட்டு யானைகளை ஜே.சி.பி. இயந்திரத்தைக் கொண்டு விரட்டிய சம்பவம் பொதுமக்களை அதிருப்தியடையச் செய்தது.
தடாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உலா வந்து கொண்டிருந்த காட்டு யானைகளில் ஒன்றான விநாயகனை வனத்துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு சிறைபிடித்து முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். பயிர்களை சேதப்படுத்தி வந்தாலும், பிற வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வந்த விநாயகனின் பிரிவு தடாகம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், தடாகம் பள்ளத்தாக்கில் 5 யானைகள் கொண்ட கூட்டம் பகல்நேரத்தில் உலா வந்தது. அப்போது, வனத்துறையினர் ஜே.சி.பி. இயந்திரத்தைக் கொண்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். இதனால், அலறியடித்துக் கொண்டு யானைகள் ஓடின. இருப்பினும், அதில் ஒரு பெண் யானை மட்டும் ஜே.சி.பி. இயந்திரத்தை திருப்பித் தாக்கியது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், சிலர் இதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதனிடையே, காட்டு யானைகளை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் விரட்டிய வனத்துறையினரின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
"பெரும்பாலும் விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டவே வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், பகல் நேரங்களில் யானைகள் ரோந்து வந்தன. அப்போது, அங்கிருந்த ஜே.சி.பி. இயந்திரத்தைப் பயன்படுத்தி யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால், அப்போது, காட்டு யானை திடீரென பதில் தாக்குதல் நடத்தியது எதிர்பாராத ஒன்று," இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.