மக்களின் உடைமைகளையும், உயிர்களையும் பாதுகாக்கும் 'காவலன் ஆப்' : கோவை மக்களிடையே நல்ல வரவேற்பு

கோவை : பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் ஆப்பை, பதிவிறக்கம் செய்து வருபவர்களின் எண்ணிக்கை கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கோவை : பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் ஆப்பை, பதிவிறக்கம் செய்து வருபவர்களின் எண்ணிக்கை கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

19-ம் நூற்றாண்டுகளை விட இருபதாம் நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அறிவியலில் எந்த அளவு மனிதர்கள் வளர்ச்சி அடைந்து உள்ளார்களோ, அதே அளவிற்கு குற்றங்களும் பெருகி வருகிறது. குறிப்பாக, நம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகரில் நிர்பயா என்ற பெண் என்ற சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



இந்த சம்பவத்திற்கு பிறகுதான் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என குரல்கள் ஓங்கின. இதைத்தொடர்ந்து பெண்களை பாதுகாக்க அரசு சட்டங்களை வகுத்தும் குற்றங்கள் ஓயவில்லை.

2012-க்கு பிறகான புள்ளிவிவரம் :

கடந்த 2012-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 2 லட்சத்து 44 ஆயிரம் குற்றங்கள் நடைபெற்றதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 2013-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரமாகவும், 2014-ஆம் ஆண்டில் 3 லட்சத்து 38 ஆயிரமாகவும், 2015-ஆம் ஆண்டில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 394 ஆகவும், 2016-ஆம் ஆண்டில் 3 லட்சத்து 40 ஆயிரமாகவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 2012-ஆம் ஆண்டில் 41.7 சதவிகிதமாக இருந்த குற்றங்கள், 2016-ஆம் ஆண்டில் 55.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

ஆபத்து மற்றும் அவசர உதவிக்கு 100 ;

 

போலீஸ் உதவிக்கு 100-ம், ஆம்புலன்ஸ் சேவைக்கு 108-ம், குழந்தைகளுக்கு உதவிட 1098-ம், மூத்த குடிமக்களுக்கு 1253-ம், தீயணைப்பு வாகனத்தை அழைக்க 101 என இப்படி ஏராளமான அவசர உதவி எண்கள் நம் நாட்டில் செயல்பாட்டில் உள்ளன. இந்த உதவி எண்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். இதில், குறிப்பாக பொதுமக்கள் காவல்துறை உதவியை நாட "100" என்ற எண்ணுக்கு இத்தனை ஆண்டுகளாக அழைத்து புகார்கள் மற்றும் தகவல்களை கொடுத்து வருகின்றனர். இந்த அவசர உதவி எண் பொதுமக்களுக்கு பல நேரங்களில் உதவிகரமாக இருந்தாலும், இதில் சில குறைபாடுகள் இருந்துதான் வருகிறது.

அதாவது, பொதுமக்கள் இந்த 100 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைத்தால் சில நேரங்களில் பிசியாக காணப்படுவது வழக்கம். அதேபோல, குற்றம் நடக்க நடக்க அழைக்கும் பொழுது அந்தக் குற்றம் நடக்கும் இடம், தகவல் ஆகியவற்றை காவல்துறை அறிந்து அந்த இடத்திற்கு செல்வதற்குள் குற்றம் நடந்தே முடிந்துவிடுகிறது. இருப்பினும், காவல்துறையினர் பிறகு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்வதும், அடுத்தகட்ட நகர்விற்கு செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால், பொதுமக்கள் காவல்துறையினர் குற்றம் நடப்பதற்கு முன்பாகவும், குற்றம் நடந்து முடிவதற்குள் தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அப்படி குற்றம் நடப்பதற்கு முன்பாகவே தடுக்கப்பட்டால் குற்ற எண்ணிக்கை நம் நாட்டில் குறையும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்வதும் குறையும். இதைக் கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை குற்றம் நடப்பதற்கு முன்பு தடுப்பதற்கான செயலியை உருவாக்கி உள்ளனர்.

காவலன் ஆப் :

காவலன் SOS ஆப் ஆனது கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி தமிழக முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப் மூலம் பொதுமக்கள் காவல்துறையை விரைவில் தொடர்புகொண்டு அவசர கால உதவியைப் பெறலாம். இந்த காவலன் SOS ஆப் பட்டனை தொட்டவுடன் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து செல்போனில் கேமரா தானாகவே 15 வினாடிகளில் ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து, காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பிவிடும். அதிர்வு தூண்டல் வசதியின் மூலமும் தொடர்பு கொள்ளலாம். காவலன் SOS ஆப் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயங்கும் வசதி உள்ளது. இது இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் கூட தானியங்கி எச்சரிக்கை மூலமாக செயல்படும் என்பது சிறப்புக்குரியது.



இந்த ஆப்பை தங்கள் மொபைலில் பயன்படுத்த மொபைலில் உள்ள பிளே ஸ்டோர் சென்று காவலன் sos என டைப் செய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், முகவரி, கைப்பேசி எண், ஆபத்தின் போது தொடர்புகொள்ளக் கூடிய உறவினர் அல்லது நண்பர்கள் எண்களையும் பதிவிட்டு இந்த ஆப்பை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கலாம்.

கோவையில் காவலன் :

கோவை மாநகர காவல்துறையினர் இந்த காவலன் ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வுக்காக மாநகரில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களை தேர்வு செய்து 174 இடங்களில் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர். அதேபோல, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில், பொது இடங்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேரும்படி கிட்டத்தட்ட 229 நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். மேலும், நான்கு சினிமா அரங்கிலும் இந்த விழிப்புணர்வு விளம்பரத்தை செய்துள்ளனர். 



இந்த தொடர் விழிப்புணர்வுகள் மூலம் நேற்று வரை மாநகரின் மேற்கு பகுதியில் 6,360 பேரும், மத்திய பகுதியில் 14,366 பேரும், தெற்கு பகுதியில் 6,809 பேரும், கிழக்கு பகுதியில் 33,982 என மொத்தம் 61,517 பேர் இந்த காவலன் ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், பதிவிறக்கம் செய்தவர்களில் நேற்று வரை 84 பேர் இந்த ஆப்பை பயன்படுத்தியுள்ளனர். இதில், 64 பேர் புகார்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். மீதம் உள்ள 20 பயன்பாடுகள் காவலன் ஆப் செயல்பாடுகளை உறுதிப்படுத்த பொதுமக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

உடைமையும், உயிரையும் பாதுகாக்க..! : 

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையின் துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டாக்டர்.பாலாஜி சரவணன் கூறும்போது :- இந்த காவலன் ஆப் மூலம் ஆபத்துகளுக்கு உள்ளாகுபவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம். இந்த ஆப்பானது கோவை மாநகர போலீசாரின் தொடர் விழிப்புணர்வுகளால் அதிக அளவு டவுன்லோடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதை பெண்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படி சிறப்பு வாய்ந்த இந்த ஆப்பினை இளம் பெண்கள், நடுத்தர வயதினர், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி தங்களின் உடைமையும், உயிரையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம், இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...