கோவை : கோவையில் நீண்ட நாளாக தொடரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதலாக 40 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகரக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவையில் நீண்ட நாளாக தொடரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதலாக 40 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகரக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்று வரும் சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கோவை மாநகர காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கூடுதலாக 40 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் கூறுகையில், "அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில் சந்திப்பு, பயனீயர் மில் சாலை சந்திப்பு, ஹோப் காலேஜ் சிக்னல், திருச்சி சாலையில் சிங்காநல்லூர் சந்திப்பு, சத்தி சாலையில் சிவானந்தபுரம், சரவணம்பட்டியில் உள்ள துடியலூர் பிரிவு, பேரூர் சாலையில் உள்ள வைசியாள் வீதி, லங்கா கார்னர், தடாகம் சாலையில் உள்ள என்.எஸ்.ஆர் ரோடு சந்திப்பு, பூமார்க்கெட், பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் சந்திப்பு ஆகிய 14 இடங்கள் மாநகரில் நெரிசல் மிகுந்த பகுதி என கண்டறியப்பட்டு உள்ளது.
அந்த பகுதிகளில் காலை, மாலை போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த கூடுதலாக 40 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 உதவி ஆணையர்கள், 3 ஆய்வாளர்கள் உள்ளனர். மேலும், குனியமுத்தூர், அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வணிகவளாகங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றில் கடந்த மாதம் மட்டும் 177 கேமராக்கள் அப்பகுதி மக்களால் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள், போத்தனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கேமராக்களை இணைக்கும் வகையில், கோவை மேற்கு பகுதியில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றியடைந்தால், நகரி்ன் முக்கிய இடங்களில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்க்கும் பணிகள் தொடங்கப்படும்," என்றார் சுமித்சரண்.