கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையம் சார்பில் இன்று உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டது.
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையம் சார்பில் இன்று உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டது.

இதில், கோவை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளம்பெண்கள் தங்களையும் இந்தச் சமூகத்தையும் எச்.ஐ.வி.யிடமிருநது காத்துக் கொள்வது பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு அட்டைகளை தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. எய்ட்ஸ் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நடந்த இப்போட்டியில் சுமார் 250 மாணவியர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவர் பிரசன்னா, சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து எச்.ஐ.வி. பற்றிய தகவல்களை இளைய சமூகத்திற்கு ஏற்ற வகையில் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்திலிருந்து பங்கேற்ற அபர்ணா, எச்.ஐ.வி. குறித்து அறிவதில் மகளிருக்கு இருக்கும் தடைகள், தயக்கங்களை விட்டு வெளிவந்து விழிப்புணர்வு பெறுவதோடு சமூகத்தையும் பாதுகாப்பதன் மூலம் மாற்றத்தை உருவாக்கக் கூடிய தலைமைப் பண்புடையவர்களாக பெண்கள் திகழ வேண்டும் என வலியுறுத்தினார். கோவை ரோட்டரி சங்கத் தலைவர் ஜோசப் பால் மற்றும் ரோட்டரி சங்கத்தின் தகுர்பிரீத் சிங் ஆகியோரும் எச்.ஐ.வி குறித்த தகவல்கள் மற்றும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்துப் பேசினர்.
இதேபோல, சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, 1,500-க்கும் மேற்பட்ட ரெட் ரிப்பன்கள் வழங்கப்பட்டன. மேலும், 1,500-க்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன.
