கோவை : படைப்புகளுக்கு பஞ்சமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஓவியக் கலையில் ஃபையர் பெயிண்டிங்கை புகுத்தி அசத்தியுள்ளார்.
கோவை : படைப்புகளுக்கு பஞ்சமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஓவியக் கலையில் ஃபையர் பெயிண்டிங்கை புகுத்தி அசத்தியுள்ளார்.
ஜி.ஆர்.டி. கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் துறையின் இணை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் டி. வசந்தகுமார். 24 வயதான இவர் சிறந்த ஓவியராகவும் வலம் வருகிறார். ஓவியத் துறையில் கொண்டுள்ள ஆர்வத்தால், விநோத படைப்பை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையாலும் பொதுமக்களை தன்பக்கம் திருப்பியுள்ளார். அதாவது, பட்டாசு மருந்துகள் மற்றும் கற்பூரத் துகள்களைக் கொண்டு நெருப்புடன் கூடிய ஓவியங்களை வரைந்து, அசத்தி வருகிறார். இது போன்ற ஓவியங்களை அசாத்தியமான மூலக்கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டியிடம் அவர் கூறியதாவது :- அடர்த்தியான காகிதத்தில் ஸ்கெட்சு பென்சில்களைக் கொண்டு படம் வரைந்து, அதற்கு பட்டாசு மருந்துகள் மற்றும் கற்பூரத் துகள்களைப் பயன்படுத்தி வர்ணம் தீட்டுவேன். பின்னர், அதில், நெருப்பினை பற்ற வைத்து, 'ஃபையர் பெயிண்டிங்' உருவாக்குகிறேன்.
கல்லூரியில் நான் பயிலும் காலங்களில் நான் பயன்படுத்திய தொழில்நுட்பங்களையே முதலில் பயன்படுத்தி வந்தேன். ஆனால், எனது ஆர்வ மிகுதியால், பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 'ஃபையர் பெயிண்டிங்' உருவாக்கினேன். இதற்காக நெருப்புடன் நான் நேரம் செலவிடுவதைக் கண்டு எனது பெற்றோர்கள் பயப்பட்டனர். நான் எனது ஆசிரியர்கள் ரவிராஜ், முருகேஷ் ஆகியோரால் ஈர்க்கப்பட்டேன். ஏனெனில், எனது யோசனைகளுக்கு அவர்கள் மதிப்பளித்தனர். தீயினைப் பயன்படுத்துவதால் பொருட்கள் எரிந்து நாசமாவதுதான் இயல்பு. ஆனால், எனது படைப்பில் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏனென்றால், பென்சிலில் வரைந்து, அதன் வெளிப்புறங்களில் பசையினைப் பயன்படுத்தி உலர வைப்பதுதான் காரணம், இவ்வாறு அவர் கூறினார்.

ஓவியர் வசந்தகுமாரின் 'ஃபையர் பெயிண்டிங்' படைப்பு அண்மையில் கோவை ஜென்னி கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இவரது விநோதமான இந்த பெயிண்டிங் விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.