சென்னை : பள்ளி மாணவர்களின் புத்தகப் பையின் எடை அளவை நிர்ணயம் செய்து பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை : பள்ளி மாணவர்களின் புத்தகப் பையின் எடை அளவை நிர்ணயம் செய்து பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளி கல்வி முறையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது, பள்ளி மாணவர்களின் வசதிக்காக, அவர்களின் பள்ளி புத்தகப் பையின் எடை அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, ஒன்றாம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணாக்கரின் புத்தகப் பை 1.5 கிலோவும், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணாக்கரின் பையின் எடை 2 முதல் 3 கிலோ வரையிலும் இருக்கலாம். 6 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 4 கிலோவாகவும், 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 4.5 கிலோவாக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 5 கிலோ என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு வேறு ஏதேனும் கூடுதல் புத்தகங்களையோ, நோட்டு புத்தகங்களையோ எடுத்து வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தக் கூடாது.

மேலும், 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. மொழிப்பாடம் மற்றும் கணிதப் பாடங்களை தவிர்த்து பிற பாடங்களை எழுதி வர கட்டாயப்படுத்தக்கூடாது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.