நாகை: நாகையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காக 2,863 கைப்பம்புகள் அமைக்க செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகை: நாகையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காக 2,863 கைப்பம்புகள் அமைக்க செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாலையூர் ஊராட்சியில் இன்று ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு கஜா புயலினை மிக கவனமுடன் எதிர்கொண்டு, இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கீழையூர், கீழ்வேளுர், திருமருகள், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் உள்ளிட்ட ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் 198 ஊராட்சிகளில் 980 குக்கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
அவ்வாறு பாதிக்கப்பட்ட ஊராட்சிகளில் ஜெனரேட்டர்கள் மூலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீரேற்றம் செய்யப்படும். நிரந்தர தண்ணீர் தேவையைக் கணக்கில் கொண்டு நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 980 குக்கிராமங்களில் தலா ரூ.7,000 வீதம் 2,863 கைப்பம்புகள் ரூ. 2.41 கோடி மதிப்பில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் அமைக்கப்படவுள்ளது. அவற்றில் தற்போது வரை 79 கைப்பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளில் விரைந்து முடித்திட அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்துத் துறை அமைச்சர்களும் புயல் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலேயே முகாமிட்டுள்ளதால், பொதுமக்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும். ஆதலால், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் ஏதுவாக இருப்பினும் அமைச்சர்களிடம் தெரிவித்து உடனடித் தீர்வை பெற்றுக்கொள்ளலாம், என்றார்.