திருப்பூர் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான முதல்கட்ட நிவாரணப்பொருட்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி அனுப்பி வைத்தார்.
திருப்பூர் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான முதல்கட்ட நிவாரணப்பொருட்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி அனுப்பி வைத்தார்.

திருப்பூர் - பல்லடம் சாலையில் அமைந்துள்ள இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி பேசியதாவது :- முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதற்கட்டமாக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு தேவையான அரிசி, தண்ணீர் பாட்டில்கள், உயிர்காக்கும் மருந்துகள், பால் பவுடர், பற்பசை, போர்வைகள், சானிட்டரி நாப்கின்கள், டீ-சர்ட்டுகள், பிஸ்கட்டுகள் மற்றும் பாக்குமட்டையிலான தட்டுக்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அதிகளவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு முன்வந்து, பல்லடம் சாலையில் அமைந்துள்ள இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் வழங்கலாம். இல்லையெனில், 0421-2971199 அல்லது 1077 என்னும் தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா இராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மற்றும் துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.