கோவை : கோவை மாவட்டம் தாமஸ் வீதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 475 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை : கோவை மாவட்டம் தாமஸ் வீதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 475 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாமஸ் வீதியை அடுத்த பொறிக்கார சந்து பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அதில், அப்பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாகாராம் என்பவருக்கு சொந்தமான குடோனில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 475 கிலோ எடையிலான பான்பராக்,குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், குடோன் உரிமையாளரான வாகராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தனது பொருட்கள் இல்லை என்றும், குடோனை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் வாகராம் தெரிவித்துள்ளார். ஆனால், வாகாராம் மீது ஏற்கனவே குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தொடர்ந்து இதேபோல பதுக்கலில் ஈடுபட்டு வரும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.