கோவை : சர்கார் படத்திற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைதியான வழியே தளபதி விஜயின் வழி என்றும், அதனையே தாங்கள் பின்பற்றுவதாக கோவை மாவட்ட விஜய் ரசிகர்மன்ற தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை : சர்கார் படத்திற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைதியான வழியே தளபதி விஜயின் வழி என்றும், அதனையே தாங்கள் பின்பற்றுவதாக கோவை மாவட்ட விஜய் ரசிகர்மன்ற தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி இயக்குநர் முருகதாஸை கைது செய்ய வேண்டும் என கோவையில் சாந்தி திரையரங்கு முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பேனர்களை கிழித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய் ரசிகர்மன்றத்தின் கோவை மாவட்ட தலைவர் சம்பத்குமார், சாந்தி திரையரங்கிற்கு சென்றார். அப்போது, விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் வாயிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் சம்பத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது :- திரையரங்கம் முன்பாக அ.தி.மு.க.வினர் போட்டுச் சென்ற குப்பைகளை அகற்றவே இங்கு வந்தேன். பொதுமக்கள் யாரும் அச்சப்படாமல் திரையரங்கிற்கு வந்து சர்க்கார் படம் பார்க்கலாம். திரைப்படம் பார்க்க வருபவர்கள் யாரும் பயப்பட தேவையில்லை.
அ.தி.மு.க.,வினரின் இந்த செயலுக்கு எதிர்வினை என்பதெல்லாம் இல்லை. அமைதியான வழியே தளபதி விஜயின் வழி, அதையே பின்பற்றுகின்றோம். பொதுமக்கள் நலன் கருதியும், திரையரங்க சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதால் பேனர்களை அகற்ற முடிவு செய்துள்ளோம். தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும், என்றார்.