கோவை: கேரளாவில் நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் தமிழக லாரி கிளீனர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் காய்கறி மண்டி வியாபாரிகள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கேரளாவில் நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் தமிழக லாரி கிளீனர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் காய்கறி மண்டி வியாபாரிகள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டீசல் விலையேற்றம், சுங்க வரி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தேக்கி வைக்க இயலாத அழுகும் உணவு பொருளான காய்கறிகளை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏற்றிச் சென்ற லாரியை, கேரளாவின் கஞ்சிக்கோடு அருகே வழிமறித்த கும்பலொன்று சரமாரியாக கல்வீசி தாக்கியது.

இதில், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் நூருல்லா காயத்துடன் தப்பிக்க, அன்னூரை அடுத்துள்ள வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய்குமார் என்கிற முபாரக் பாட்ஷா பலத்த காயமடைந்து பலியானார்.
கேரளாவில் லாரி கிளீனரை கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் மேட்டுப்பாளையத்தில் உள்ள லாரி ஓட்டுனர்கள், கிளீனர்கள், காய்கறி மண்டி உரிமையாளர்கள் மற்றும் பாரம் ஏற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினசரி மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் ஆயிரம் டன் வரை காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில் கேராளாவிற்குள் இனி காய்கறி லாரிகளை இயக்க மாட்டோம் என தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காய்கறிகளை உடனுக்குடன் விற்பனைக்குக் கொண்டு செல்லாவிட்டால் விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இன்று ஒரு நாள் கேரளாவில் விஜய்குமார் என்கிற முபாரக் பாட்ஷா கொல்லப்பட்டதிற்கு கண்டனம் தெரிவித்து காய்கறிகளை மண்டிகளை அடைத்து வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் காய்கறி வர்த்தக மண்டிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன. இதனால் மேட்டுப்பாளையத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட காய்கறி மண்டிகள் மற்றும் ஏல மையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு எப்போதும் பரபரப்புடன் காணப்படும் காய்கறி சந்தை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.