நீலகிரி: குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கும் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் புனரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கும் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் புனரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஏழைகளின் காஷ்மீர் என அழைக்கப்படுவதால், சாமானிய மக்களும் உதகைக்கு சுற்றுலா வருகின்றனர். இவர்களுக்கான ஒரே போக்குவரத்து அரசு பேருந்துகள் தான்.
உதகை, குன்னுார், கூடலூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் பகுதி 1, ஆகிய போக்குவரத்து கிளைகளை உள்ளடக்கி, உதகையில் அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகம் செயல்படுகிறது.
உதகை கிளையிலிருந்து 250 பேருந்துகள், மாநிலத்தின் பல இடங்களுக்கும், உள்ளூர் கிராமப் புறங்களுக்கும் இயக்கப்படுகின்றன. இது தவிர மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் உட்பட பகுதிகளில் இருந்தும், தினசரி 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள், உதகைக்கு வந்து செல்கின்றன. தினசரி ஆயிரக்கணக்கான மக்களும், ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் உதகை பேருந்து நிலையத்துக்கு வந்து, பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணிக்கின்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற உதகையின் பேருந்து நிலையம் சர்வதேச தரத்தில் இல்லாதது பெரும் பின்னடைவாகும்.
அலங்கோலமான காட்சி:
பேருந்து நிலையம் முழுவதும் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால், மழை காலங்களில் இந்தக் குழிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பேருந்துகள் தொடர்ந்து வந்து செல்வதால் மக்கள் பேருந்து நிலையத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது, உதகையில் மழை பெய்து வருவதால், பயணிகள் நிலை மேலும் மோசமாகி விடுகிறது.

பெரும் குழிகளில் பேருந்துகள் இறங்கி ஏறும் போது மழை நீர் மற்றும் சகதி பயணிகள் மீது தெளிக்கிறது. சில நேரங்களில் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் குழிகளில் கால் இடறி கீழே விழுந்து பேருந்து சக்கரங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தினுள் உள்ள பணிமனை தளம் கூட, சேறு, சகதி நிறைந்து காணப்படுகிறது. அதில் நின்றபடி தான், 'மெக்கானிக்குகள்' பணியாற்ற வேண்டியிருக்கிறது.
துரிதப்படுத்தக் கோரிக்கை
உதகை பேருந்து நிலையத்தைப் புனரமைக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணி தொடங்கும் என கடந்தாண்டு முதலமைச்சர் அறிவித்தார். இந்நிலையில், புனரமைப்புப் பணிக்கு ரூ. 4 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. எனவே, கூடுதல் நிதி கோரி மாவட்ட நிர்வாகம் அரசுக்கு திட்ட மதிப்பீடு சமர்ப்பித்தது. முதலமைச்சர் அறிவிப்பு வெளியாகி, ஓராண்டாகியும் பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் தொடங்கவில்லை. இதனால், உதகை பேருந்து நிலையம் அலங்கோலமாகவே காட்சியளிக்கிறது.