மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நீர்த்தேக்க பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரளிக்காடு பகுதியில் வனத்துறையினரால் நடத்தப்படும் சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நீர்த்தேக்க பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரளிக்காடு பகுதியில் வனத்துறையினரால் நடத்தப்படும் சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்து கடந்த பத்தாம் தேதி அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.
இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்வரத்து உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், இப்பகுதியில் வனத்துறை சார்பில் நடைபெற்றுவரும் சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

பில்லூர் அணையின் பின்புறம் உள்ள அதன் நீர்த்தேக்க பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் வனத்துறை மற்றும் அப்பகுதி பழங்குடியின மக்கள் சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. இயற்கை எழில் மிகுந்த இப்பகுதியில் வாரத்தில் சனி மற்றும் ஞயிற்று கிழமைகளில் நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இங்கு வருவது வழக்கம்.
இயற்கையை நேசிப்பவர்கள் பெரிதும் விரும்பும் இந்த சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் பரிசல் மூலம் இரண்டு மணிநேரம் பயணம் மேற்கொள்ள பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் வனத்திற்குள் நடைப்பயணம், மதிய உணவு, ஆற்றுக்குளியல் என காலை முதல் மாலை வரை நீடிக்கும் இந்த சூழல் சுற்றுலா தற்போது பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பரிசல் பயணம் செல்லும் நீர்தேக்கப் பகுதி தற்போது நீர்வரத்து அதிகரிப்பால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதில் பரிசலில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்பதோடு, சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கும் பகுதி மற்றும் உணவு அருந்த ஏற்பாடு செய்யப்பட்ட பகுதி என அனைத்தும் நீரில் மூழ்கி விட்டதால் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ள சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.