கோவை: கட்டிடக் கழிவு மறுசுழற்சி மைய திட்டப்பணிகளை தொடங்க தாமதித்து வந்ததால் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த உரிமத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
கோவை: கட்டிடக் கழிவு மறுசுழற்சி மைய திட்டப்பணிகளை தொடங்க தாமதித்து வந்ததால் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த உரிமத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
கோவை மாநகரில் சேகரிக்கப்படும் கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி செய்ய வழியின்றி, பல்வேறு நீர் நிலைகளிலும், குளங்களிலும் கொட்டப்பட்டு வருகின்றது. இதைத் தடுக்கும் வகையில் கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து செங்கல் மற்றும் பேவர்பிளாக் கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை தயாரிப்பதற்கான கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம் உருவாக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டது.அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி மாநகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் , மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் உக்கடம் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டிட மறுசுழற்சி மையம் அமையவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
திட்டம்
இந்த திட்டத்திற்காக ரூ.9 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தை தனியார் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இந்த கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையத்தில் 100 மெட்ரிக் டன் அளவிலான கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யமுடியும். இந்த திட்டத்தை முன்னெடுக்கத் தமிழக அரசு ரூ.1,257.96 லட்சம் ஒதுக்கீடு செய்தது. உட் கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.9 கோடி வரை ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று வரையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது வரை உயரமான சுற்றுச்சுவர் மட்டுமே அந்த 15 ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் நின்று கொண்டிருக்கிறது.

செயல் திட்டம்
இதற்காக சென்னையைச் சேர்ந்த 'நியூ வே இன்ஜினியரிங்' என்ற தனியார் நிறுவனம் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிறுவனம் கட்டிட மறுசுழற்சி பணியை அடுத்த இருபது ஆண்டுகளுக்கு செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நூறு வார்டுகளிலும் உள்ள கட்டிடக் கழிவுகளை பெற 17 மையங்கள் அமைத்து, அதன் மூலம் சேகரித்த கட்டிடக் கழிவுகளை, மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு சென்று செங்கல் மற்றும் பேவர்பிளாக் கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை தயாரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், "வாரந்தோறும் கோவை சுற்றியுள்ள குளங்களில் பராமரிப்பு பணிகளை எண்கள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. குளக்கரைகளில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால், நீரின் தன்மை கெட்டுவிடுகிறது. கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம் அமைப்பதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதமே மாநகராட்சி நிர்வாகம் கூறியது. ஆனால், இன்று வரையில் திட்டம் தொடங்கவில்லை." என்றார்.
"குளக்கரையில் கொட்டப்பட்டு வரும் கட்டிடக் கழிவுகளும் அகற்றப்படுவதில்லை. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இந்த கட்டிடக் கழிவுகளை அகற்றுவதும் இல்லை. மழைக் காலங்களில் அந்த இடம் மிகவும் சேற்றுப் பகுதி நிறைந்த இடமாக மாறிவிடுகிறது." என்கிறார் மற்றொரு சமூக ஆர்வலர்.
காலதாமதம்
கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், வரி கட்டண பிரச்சனையால் துறைமுகத்தில் இருந்து இயந்திரங்களை வெளியே எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டது. இதனால், கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம் அமைக்கும் திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்நிலையில், கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையத் திட்டப்பணிகள் கடந்த ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தொடங்காமல் இருந்தால், ஒப்பந்த உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சியால் எச்சரிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்நிறுவனத்தினர் தொடர்ந்து தாமதம் செய்து வந்தனர். எனவே, ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த உரிமத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

கூடுதல் சுமை
குளக்கரைகளிலும், சாலையோரங்களிலும் கொட்டப்படும் கட்டிக் கழிவுகளையும், கொட்டும் புகைப்படங்களையும் பார்க்கும் போது, மனம் பதைபதைப்பதுடன், அவற்றைக் கொட்டும் இடம் குளக்கரைதானோ? என்ற தவறான அபிப்பிராயமும் பொதுமக்கள் உருவாகிறது. சாதாரண குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து மறுசுழற்சி செய்வதிலேயே கோவை மாநகராட்சி நிர்வாகம் திணறி வரும் நிலையில், கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம் அமைப்பதில் கால தாமதம் ஆவது கூடுதல் சுமையாக மாறி வருகிறது.
மாநகராட்சி நிர்வாகமே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், தனியார் நிறுவனம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு இத்திட்டம் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டிக் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்ற முகாந்திரம் இருந்தும், இந்த திட்டம் செயல்படுத்துவதில் ஏன் இத்தனை தாமதம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி..?