'அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் அவஸ்தைப்படுத்துகிறார்கள்' : கோவை ரயில்நிலையத்தில் கார் நிறுத்த இடமில்லாமல் புலம்பும் பயணிகள்

கோவை: பயணிகளுக்கு வசதியாக கோவை மத்திய ரயில்நிலையத்தின் பார்க்கிங் பகுதியை மாற்றியமைப்பதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், 4 சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் பயணிகள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது.


கோவை: பயணிகளுக்கு வசதியாக கோவை மத்திய ரயில்நிலையத்தின் பார்க்கிங் பகுதியை மாற்றியமைப்பதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், 4 சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் பயணிகள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. 



தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வருவாயிலும், ரயில் போக்குவரத்து எண்ணிக்கையிலும் திகழ்வது கோவை மத்திய ரயில் நிலையம் தான். ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரளா மாநிலங்களின் பல்வேறு இடங்களுக்கு தொழில் ரீதியாகவும், பணி நிமித்தம் காரணமாகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் கோவை ரயில்நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் தங்களின் வாகனங்களைக் கோவை ரயில்நிலையத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.



இதன் காரணமாக, இடநெருக்கடி ஏற்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். அதனை சீர்செய்யவும் ரயில்நிலையத்தை அழகுப்படுத்தவும் தென்னக ரயில்வே சேலம் கோட்டம் மல்டிலெவல் பார்கிங் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 



இருசக்கர வாகனங்கள் நிறுத்த ரயில்நிலையம் பின்புறம் உள்ள இடத்தை தேர்வு செய்து அங்கு மல்டிலெவல் பார்கிங் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கார் பார்க்கிங் பிரச்னைகளை தீர்க்க வேண்டிய ரயில் நிர்வாகம், ரயில்நிலையத்தின் முன்பகுதியில் கார் பார்க்கிங்கை விமான நிலையம் போன்று மாற்ற வேண்டும் என எண்ணி கட்டண பார்கிங் இடத்தில் தனித்தனி நிறுத்துமிடமாக மாற்றியமைத்துள்ளது. 

இதற்கு முன்னர், 40-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்படுத்தியுள்ள மாற்றத்தால் 21 கார்கள் மட்டுமே நிறுத்த முடியும். மல்டிலெவல் கார் பார்கிங் திட்டமும் இன்னும் தொடங்கவில்லை. இதனால், நான்கு சக்கர வாகன ஒட்டிகள் கார்களை நிறுத்த இடமில்லாமல் 2 கி.மீ. முன்னரே வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் நிலையத்திற்கு வருகிறார்கள். இந்நிலையில், இந்த அழகுபடுத்தப்பட்ட கார் பார்கிங்கால் இதுவரை முன் பகுதியில் நிறுத்தப்பட்டு வந்த இருசக்கர வாகன நிறுத்தும் இடத்திலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதுகுறித்து திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எல். ராஜ்குமார் என்ற பயணி கூறுகையில், "தினமும் கோவையிலிருந்து திருப்பூருக்குப் பணி நிமித்தம் காரணமாக ரயிலில் சென்று வருகிறேன். இருசக்கர வாகனத்தை ரயில்நிலையத்தில் நிறுத்திவிட்டு செல்வேன். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இடநெருக்கடியால் டவுன்ஹால் பகுதியில் நிறுத்தி விட்டு சுமார் 2 கி.மீ., தூரம் வரை நடந்து வரவேண்டியுள்ளது. இதனால், சில சமயங்களில் நேரம் தாமதமாகி ரயில் சென்றுவிடுகிறது. தீர்வு காண வேண்டிய நிர்வாகமோ மேலும் அவஸ்தைப்படுத்துகிறது," என்றார்.

தற்போது ரயில்நிலையத்தின் பின்புறத்தில் கார்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. எனினும், இந்த இடநெருக்கடியை சமாளிக்க முக்கிய ரயில்கள் கோவை மத்திய ரயில்நிலையத்தில் இருந்து புறப்படாமல் தெற்கு அல்லது பீளமேடு ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டால் இடநெருக்கடியை குறைக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் எம். ஜமீல் கூறுகையில், "கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில்நிலையங்களிலிருந்து சென்னை செல்லக் கூடிய சேரன், நீலகிரி மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டு சென்றால், கோவை மத்திய ரயில்நிலையத்தில் இடநெருக்கடி குறையும் என 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ரயில்வே அமைச்சகத்திற்கு மனு அளித்துள்ளோம். அதேபோல, வடமாநிலத்திற்கு செல்லக்கூடிய ரயில்களையும் 10 நிமிடங்கள் வரை கோவை மத்திய ரயில்நிலையத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும். அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்," என்றார்.

"ரூ. 8 லட்சம் செலவில் தற்போது கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம் தொடங்கப்படும்," என ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாகனங்களை நிறுத்தத் தனி இடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், இடநெருக்கடியை சமாளிக்க உடனே மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...