முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மே 3-ல் ஆஜராக திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மே 3-ல் ஆஜராக திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக தமிழக அரசின் முன்னாள் சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி கிளை மேலாளர் லீலா செல்வகுமாரி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனுடன் குறுக்கு விசாரணை நடத்த, சசிகலா தரப்பினர் கோரியிருந்தனர். அதன்படி, சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மூவரும் ஆஜராகினர். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கேள்விகளுக்கு சாந்தா ஷீலா நாயர், லீலாசெல்வக்குமாரி ஆகியோர் விளக்கம் அளித்த நிலையில், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனிடம் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த நிலையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், தாமாக முன்வந்து விசாரணைக்கு ஆஜரானார்.
இந்த நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மே 3-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த ஜெயலலிதா குறித்த மருத்துவ விவரங்களை ஆய்வு செய்ய மருத்துவக்குழு ஒன்றை அரசிடம் ஆணையம் கேட்டிருந்தது. இதற்கு மருத்துவ குழுவை ஆணையமே அமைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜெயலலிதாவின் மருத்துவ ஆவணங்களைச் சரிபார்க்க விரைவில் ஆய்வுக்குழு அமைக்கப்படும் என ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.