கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் சுவர்களில் பல்வேறு தரப்பினரும் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
கோவை, ஜனவரி 11
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் சுவர்களில் பல்வேறு தரப்பினரும் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுப்புறத்தையும் வீட்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தும் மாவட்ட நிர்வாகம் தனக்கான கட்டிடத்தைத் தூய்மையாக வைக்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "அரசு சுவர் மற்றும் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம் தற்போது பெருகிவருகிறது. இதனைத் தடுக்க கோவை மாநகராட்சி சில வருடங்களுக்கு முன்பு அரசு சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரத்தை முதலில் சங்கங்கள் ஆரம்பித்தன. அதன் பின் தற்போது பல்வேறு தரப்பினரும் இதனைப் பின் தொடர்ந்து வருகின்றனர். இது போன்ற போஸ்டர் ஒட்டுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அவர்களை ஈர்க்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுக்கின்றன. இதனால் கட்டிடத்தின் அழகு சீர்குலைந்து முகம் சுலிக்க வைக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.