கோவை, நவம்பர் 26
வீட்டு உபயோகப்பொருட்களில் வைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்த வாலிபரிடம் இருந்து 816 கிராம் தங்க கட்டிகளை கோவை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 4:30 மணியளவில் ஏர் அரேபியா வந்த விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்பட்டுள்ளதாக கோவை சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், விமானத்தின் மூலம் கோவை வந்தடைந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பயணிகளின் உடமைகளை அங்கு உள்ள ஸ்கேன் கருவி மூலம் சோதித்ததில் ஒருவரின் பையில் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பையை அதிகாரிகள் சோதனையிட்டபோது பல்வேறு வகையான கத்திகளினுள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, அந்த பயணியிடம் விசாரித்ததில் அவர், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த அப்தாப் (37) என்பது, சார்ஜாவில் இருந்து தங்க கட்டிகளை சட்ட விரோதமாக எடுத்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடம் இருந்த 816 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்தாப்-ஐ கைது செய்தனர்.