நீலகிரி, நவம்பர் 7: நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தினுள் நுழைந்த புள்ளி ஆந்தை பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக கேன்டீனில் ஆந்தை ஒன்று பிடிபட்டது. ஆந்தையை அங்கு பணிபுரிபவரும், வன ஆர்வலருமான ரமேஷ் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

பாம்புகளை பிடிப்பதில் திறமை வாய்ந்த ரமேஷ் இந்த ஆந்தை குறித்து கூறுகையில், இது அரிய வகை புள்ளி ஆந்தை. மலை பிரதேசங்களை விட சமவெளி பகுதிகளிலேயே அதிகளவில் இருக்கும். எலிகளை விரும்பி உண்ணும் இந்த ஆந்தை முதல் நாள் பிடித்து சாப்பிட்ட உணவை மறுநாள் வாய்வழியாகவே வெளியேற்றி விட்டு புதிய உணவை உண்ணும் பழக்கத்தை கொண்டவை என்றார்.
இதுபோன்ற பறவை, விலங்குகள் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துள்ள ரமேஷ், பாம்புகளை பிடிப்பதில் திறமையானவர் என்பதும், பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.