கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பல தேயிலைத் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வால்பாறை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் நேற்று (அக்..13) இரவு சுமார் 12 மணியளவில் 6 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது. குடியிருப்புவாசிகள் குணசேகரன், வேலன், செல்லத்துரை, மேகலா, மாரியாயி, முத்துலட்சுமி ஆகியோரின் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்று அட்டகாசம் செய்துள்ளன . மேலும், வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பாத்திரங்கள், டி.வி, மிக்சி, உள்ளிட்ட பொருட்களையும் யானைகள் நாசப்படுத்தின.

வீட்டில் இருந்தவர்கள் குழந்தைகளுடன் பின் வாசல் வழியாக தேயிலைக்காட்டிற்குள் தஞ்சமடைந்து கைபேசியின் மூலமாக அக்கம் பக்கத்தினர்களின் உதவியை நாடினர். பின்னர், விடிய, விடிய காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இருப்பினும், அவைகளை விரட்ட முடியவில்லை. தொடர்ந்து, யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டசாகம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். அண்மையில், கருமலை பகுதியில் வேல்சாமி என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காட்டு யானைகளை, கும்கி யானைகளை வைத்து விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.