யானைகள் - மனிதர்கள் மோதலுக்கு முக்கிய காரணம் மனிதர்களே..!

கடந்த சில நாட்களாக கோவை தடாகம் வனப்பகுதியில் யானை ஒன்று இளைஞர்களை துரத்தும் காட்சி சமூகவலைதளங்களில் அதிகமாக உலா வருகிறது. ஒருபுறம், காட்டு யானை பலி, குடியிருப்பு பகுதியில் காட்டு யானை நுழைந்து அட்டகாசம் என்ற செய்திகள் அன்றாடம் வெளியாகின்றன. இது வேறு வேறு காட்சிகள் என்று கடந்து செல்லும் விசயங்கள் அல்ல. 

யானைகள் மனிதர்களை தாக்குகிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க ஒரே காரணம் யானைகளின் வழித்தடத்தை, இருப்பிடத்தை, உணவுக்கான இடத்தை என அனைத்தையும் மனிதர்களாகிய நாம் ஆக்கிரமித்ததே ஆகும். அதுமட்டுமின்றி தற்போதைய இளைஞர்கள் யானை உள்ளிட்ட வன விலங்குகளை காண அடர்ந்த வனப்பகுதிக்குச் செல்வது, அங்குள்ள யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, செல்ஃபி மோகமும் ஒரு முக்கிய காரணமாகும்.



இதனால், யானைகளிடையே மனிதர்கள் மீதான வெறுப்புணர்வு ஏற்படுகிறது. அவை தங்களை பாதுகாத்துக்கொள்ள மனிதர்களை தாக்குகிறது. அதன் விளைவே யானை- மனிதனுக்கு இடையே நடைபெறும் மோதல். இதனை, மோதல் என்று கூறுவதை விட யானைகள் மனிதர்களை எதிர்கொள்ளல் என்ற வார்த்தையே ஆகச்சிறந்த வார்த்தையாகும்.

யானைகளின் குணங்கள் கடந்த சில ஆண்டுகளில் பெரும் அளவில் மாற்றமடைந்துள்ளன. இதற்கு யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் இயற்கை வளம் மனிதர்களால் குறைக்கப்பட்டதுமே காரணமாகும்.

முன் ஒரு காலத்தில் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன.

வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன.

இதுகுறித்தான முழு தகவலும் அறியாத தற்போதைய இளம் தலைமுறையினர் யானை, காடுகள் குறித்த புரிதல் சிறிதளவும் இன்றி தனியே வரும் யானைகள், குட்டி யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

யானைகள் ஒரே இடத்தில் வசிக்கும் விலங்குகள் அல்ல. அவை காலத்திற்கு ஏற்ப இடம் மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.

அப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் தன்னை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாயும் என்பதையும், இதனைச் செய்வது மனிதன்தான் என்பதையும் யானைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன.

இதன் காரணமாகவே யானை, மனிதனை எதிரியாகவே பார்க்கத் துவங்குகின்றன. யானை பெரிய விலங்கினம் மட்டுமல்ல. அறிவுக் கூர்மை பெற்றதும் ஆகும். இதில் உச்சபட்சமாக முதுமலை வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன.

மனிதர்களால் பாதிக்கப்பட்டு வேதனையடைந்துள்ள, நாளுக்கு நாள் எண்ணிக்கையில் குறைந்து வரும் யானைகளை தற்போதுள்ள இளைஞர்கள் பாதுகாக்கத் தவறினாலும், அவற்றின் இருப்பிடத்திற்குச் சென்று மேலும் காயப்படுத்தாமல், இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். இதன் மூலமே யானைகளுக்கும், மனிதர்களுக்கும் மோதல் ஏற்படாமல் தடுக்க முடியும்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...