சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளி, வால்பாறை மாணவர்களின் சாதனை

கோவை மாவட்டத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அடர்த்தியான வனமும், தேயிலைத் தோட்டங்களும் நிறைந்த பகுதி வால்பாறை. அங்குள்ள சின்கோனா கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.



இப்பகுதி காப்புக் காடாக இருப்பதால் சாலை, போக்குவரத்து வசதிகளின்றி, வன விலங்குகளின் அச்சுறுத்தல் என பல்வேறு பிரச்சனைகள் இங்கு சூழ்ந்து கிடக்கின்றன. இப்படியான சூழலில் வாழும் குழந்தைகளை, வனச்சூழலைக் காக்கும் சூழலியலாளர்களாக உருவாக்கி வருகிறது சின்கோனா அரசு உயர் நிலைப்பள்ளி. 

இப்பள்ளியில் 115 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளியைச் சுற்றியுள்ள இயற்கை சூழலில் பறவைகள் கணக்கெடுப்பு, பறவைகள் கண்காணிப்பு, பறவைகள் குறித்து ஆய்வு செய்வது போன்ற செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தி ஊக்கமளித்து வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள்.



சமீபத்தில் நடந்து முடிந்த ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 4 நாட்களில் 111 வகை பறவை இனங்களை பார்த்து கணக்கெடுத்து அதிக விவரங்களைச் சமர்ப்பித்து சர்வதேசப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். பறவைகள் கணக்கெடுப்புடன் நின்றுவிடாமல், அவற்றின் வாழ்வியல் பிரச்சனைகள், சூழலியல் தாக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

2 வருடத்தில் ஏற்பட்ட மாற்றம்

பறவைகள் கணக்கெடுப்புக் குழுவை ஒருங்கிணைக்கும் ஆசிரியர் செல்வகணேஷ், நமது நிருபரிடம் கூறியதாவது:- வனவிலங்குகள், பறவைகள் பற்றிய அனுபவம் இங்குள்ள மாணவர்களுக்கு நிறையவே உள்ளது. பறவை வந்தால் கல் எடுத்து எறிந்த மாணவர்கள் 2 வருடத்தில் மொத்தமாய் மாறியிருக்கிறார்கள். 



ஒரு பறவையை பார்த்தால், அது என்ன வகை, எண்ணிக்கை எவ்வளவு, எங்கு, எத்தனை மணிக்கு பார்த்தோம் என குறிப்பு எடுக்கிறார்கள். இந்த பயிற்சியின் அடிப்படையில் பல்வேறு பறவைகள் கணக்கெடுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

நடந்து முடிந்த ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் சிவப்பு மார்பு கானாங்கோழி, மலபார் வெள்ளை - கருப்பு இருவாச்சி உள்ளிட்ட அரிய இனங்களையும், சாம்பல் வாலாட்டி, கரிச்சான் குருவி, நாணல் குருவி உள்ளிட்ட 13 வகை வலசைப் பறவைகளையும் பதிவு செய்தனர். பல நாட்டு போட்டியாளர்கள் இருந்தும் கூட, குறுகிய நேரத்தில் எங்கள் பள்ளி மாணவர்களே அதிகளவில் பறவைகள் பட்டியலை வெளியிட்டனர்.



சூழலியல் அமைப்பான என்சிஎப் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. 70 மாணவ, மாணவிகள் இந்த குழுவில் உள்ளனர் என்றார்.

படிப்புக்கு உதவும் ஆய்வு

பறவைகள் குறித்து சிறு சிறு ஆய்வுகளையும் மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே தொடங்கியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலியில் தமிழ் பறவையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் சின்கோனா பள்ளி மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், மைதீஸ்வரன், சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு ‘சின்கோனா பறவைகள்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினர்.



மேலும் ‘நெஸ்ட் வாட்ச்’ என்ற பறவைக் கூடுகளை கண்காணித்தல் ஆய்விலும் இப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். ‘சீசன் வாட்ச்’ என்ற மரங்களை உற்றுநோக்கி காலநிலையை ஆராயும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் வைத்து பராமரித்து சுற்றுச்சுழலைப் பேணி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் பிரச்சனையை வேகமாகவும், வெளிப்படையாகவும் காட்டும் அளவீடு பறவைகள் மட்டுமே. எனவே பறவைகளைப் பற்றிய தேடலானது பள்ளி மாணவர்களை, சூழலியல் ஆர்வலர்களாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.



வியந்து போனேன்!

பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி நசுருதீன் கூறும்போது, ‘நான் சமீபத்தில் ஆய்வுக்காக சின்கோனா பள்ளிக்குச் சென்றிருந்தேன். 6-ம் வகுப்பு மாணவன், ஒரு பறவையைப் பார்த்து, அதன் விவரங்களை ஆங்கிலத்தில் தவறில்லாமல் எழுதி, அற்புதமாக எனக்கு விளக்கினான். அதைப் பார்த்து வியந்துபோனேன்.



பறவைகளின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவற்றை நெருங்கிச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்பை அங்குள்ள ஆசிரியர்களும், பள்ளி வளாகமும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சொந்தச் செலவில் பைனாகுலர், புகைப்படக்கருவி போன்ற உபகரணங்களை ஆசிரியர்களே வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டியது. இந்த பயிற்சி ஒரு பொழுதுபோக்காகவும், அதேசமயம் செயல்வழிக் கற்றலாகவும் மாணவர்களை நல்வழிப்படுத்தி வருகிறது’ என்றார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...