தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளித்து தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்து மக்கள் கட்சி தமிழகம் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் வி.வி.மாணிக்கம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் பிரதான கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்.

கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திட வேண்டும். மேலும் தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளித்தும் தமிழக அரசே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்திட வேண்டும்.

இதனிடையே மனு அளிக்க வந்தவர்கள் மண்பானை மற்றும் பனை ஓலைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.