இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் தீபாவளி பண்டிகையை விபத்து, மாசு மற்றும் ஒலி இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 4 வருடங்களாக தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மாசு இல்லா சுற்றுச்சூழலை பேணி காப்பது நமது கடமை. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுப்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்க அப்பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்கவும். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடத்தில் வெடிகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.