ஈஸ்டர்ன் கிரீன் ஃபீல்டு ரிங் ரோடு (EGR) என பெயரிடப்பட்டுள்ள இந்த சாலை 50 மீட்டர் அகலம் கொண்ட பசுமை புறவழிச்சாலையாகும். இது, கோவை தெற்கு புறவழிச் சாலையான எட்டிமடையில் தொடங்கி, நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் நிறைவடையும்.
கோவை: ஒரு நகரத்தின் வளர்ச்சிக்கு எண்ணற்ற உட்கட்டமைப்புகள் பக்க பலமாக இருந்தாலும், சாலை போக்குவரத்து கட்டமைப்பு என்பது மிக இன்றியமையாதது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயமுத்தூர் என்பது எண்ணற்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐ.டி பார்க்குகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,சுற்றுலா தளங்கள் நிறைந்த இந்த நகரத்துக்கு சாலை மேம்பாடு மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகவும் அவசியமானதாகும். அதுவே நகரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திட உதவும் என்பது தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் ஒருமித்த கருத்தாகும்.
இந்த நிலையில், இந்திய அளவில் வளர்ந்து வரும் கோவைக்கு சாலை போக்குவரத்து வசதி மற்றும் மேம்பால போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள் ஒருபுறம் இருந்தாலும், புறவழிச்சாலை போக்குவரத்து அவசியமானதாகவே பார்க்கப்படுகின்றன.
தற்போது, பிரதான புறவழிச்சாலையாக சென்னை - பெங்களூர் -சேலம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மற்றும் கேரளா நோக்கி செல்லும் எல் அண்ட் டி பைபாஸ் சாலையை மட்டுமே பயன்படுத்துகின்றன.
இன்னும் கூடுதலான புறவழிச்சாலை வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக தொழில்துறை மற்றும் பொதுமக்கள் முன்வைத்து வந்த நிலையில், புறவழிச்சாலையை எதிர்பார்த்தவர்களுக்கு வரப்பிரசாதமாக வரவிருக்கின்றது ரிங்க் ரோடு பைபாஸ்.
கோவைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து சிம்பிளிசிட்டி செய்திக்குழு, சம்பந்தப் 'கிரீன் ஃபீல்டு பைபாஸ்' பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசினோம். அதனடிப்படையில், நமக்கு சில முக்கியமான நகர்வுகள் தெரியவந்தன.
சென்னைக்கு ECR போல கோவைக்கு வருகிறது EGR
அதாவது, கோயமுத்தூர் நகரத்தின் சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பெரும் பங்காற்ற தயாராகி வருகிறது கிழக்கு பசுமை புறவழிச்சாலை. ”ஈஸ்டர்ன் கிரீன் ஃபீல்டு ரிங் ரோடு” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த சாலை கோயமுத்தூர் தெற்கு புறநகரான எட்டிமடை NH 544 நெடுஞ்சாலையில் ஆரம்பமாகிறது.
அங்கிருந்து கிழக்கு நோக்கி நகரும் இந்த புறவழிச்சாலை கொச்சி, சேலம் தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்து வடக்கு நோக்கி நகர்கிறது. மதுக்கரை, காரணம்பேட்டை, கணியூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக கோயம்புத்தூரின் வடக்கு புறநகர் பகுதியான நீலகிரி, மேட்டுப்பாளையம் செல்லும் என்.ஹெச் 67 சாலையின் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிக்கு சென்று முடிவடைகிறது.
”ஈஸ்டர்ன் கிரீன் ஃபீல்டு ரிங் ரோடு” 50 மீட்டர் அகலம் கொண்ட பசுமை புறவழிச்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை எதிர்ப்புறம் இரண்டு வாகனம், மறுபுறம் இரண்டு வாகனம் செல்லும் வகையில் நான்கு வழி (ஃபோர் லேன்) புறவழிச் சாலையாக அமைகிறது.
திட்ட மதிப்பு ரூ.3,500 கோடி
இதற்கான உத்தேச திட்ட மதிப்பு ரூபாய்3,500 கோடியாகும். இந்த நிதிக்குள் நிலத்துக்கான கையகப்படுத்துதல் நிவாரணம், கட்டுமான பணிகள், ஒப்பந்த பணியார்களுக்கான ஊதியம் என அ முதல் ஃ வரையிலான அனைத்து பணிகளும் இந்த நிதியில் அடங்கும்.
முதல் கட்டமாக வரைவு பட்டியல்
கோயமுத்தூர் தேசிய நெஞ்சாலை உயர் அதிகாரிகள், செயற் பொறியாளர் குழுவால் வரைவு அறிக்கை டெல்லி தேசிய நெடுஞ்சாலை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் நிலத்துக்கான கையகப்படுத்துதல் மற்றும் அடுத்த கட்ட கட்டுமான பணிகள் ஆரம்பமாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கணேசபுரம் முதல் கர்நாடகா வரை "NON STOP 96 கி.மீ" கிரீன் ஃபீல்டு ரிங் ரோடு.
”ஈஸ்டர்ன் கிரீன் ஃபீல்டு ரிங் ரோடு” பசுமை புறவழிச்சாலை போலவே கணேசபுரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹாசனூர் வரை கிரீன் ஃபீல்டு பைபாஸ் சாலை கோயமுத்தூர் மக்களுக்கு கூடுதல் வரப்பிரசாதமாக வரவுள்ளது.

அதாவது, கோயமுத்தூர் வடகிழக்கு புறநகர் பகுதியான கணேசபுரத்தில் தொடங்கி கோயில்பாளையம், அன்னூர், கீரனத்தம்பிரிவு, புளியம்பட்டி பைபாஸ் சாலைகளை இணைத்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா மாநிலம் ஹாசனூருக்கு சென்று சேர்கிறது.
ஆரம்ப கட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக இந்த பசுமை புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது அது தமிழ்நாடு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், பணிகள் ஸ்டேட் ஹைவேஸ் மூலம் நடைபெற உள்ளன.
45 மீட்டர் அகலம் கொண்ட இந்த பசுமை புறவழிச்சாலை, எதிர்ப்புறம் இரண்டு வாகனம், மறுபுறம் இரண்டு வாகனம் செல்லும் வகையில் நான்கு வழி (ஃபோர் லேன்) புறவழிச் சாலையாக அமைகிறது.
கோவையின் வடகிழக்கு பகுதியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி ஆரம்பமாகும் இந்த பசுமை புறவழிச்சாலை, 96 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படும். இந்த சாலை பணிகள் 1900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு உள்ளது.
திட்டமிடப்பட்ட 1,900 கோடி ரூபாய் நிதிக்குள் நிலத்துக்கான கையகப்படுத்துதல் நிவாரணம், கட்டுமான பணிகள், ஒப்பந்த பணியார்களுக்கான ஊதியம் என அ முதல் ஃ வரையிலான அனைத்து பணிகளும் நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கின்றனர். இந்த புறவழிச் சாலை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
சிறப்பான திட்டமிடல் - சீர்மிகு நகரமாகும் சிறுவாணி மண்.
"ஈஸ்டர்ன் கிரீன் ஃபீல்டு ரிங் ரோடு” மற்றும் கணேசபுரம் முதல் கர்நாடகா வரை "NON STOP 96 கி மீ "Green Field Bypass" குறித்து நம் செய்திக்குழு சார்பாக கோயமுத்தூர் சிட்டி டெவலப்மெண்ட் மாஸ்டர் பிளான் ஆர்கிடெக்ட் வல்லுநரான கதிரவனிடம் பேசினோம்.
அப்போது அவர் கூறியதாவது,
தென்னிந்தியாவின் மான்ஸெஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஐ டி பார்க்குகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையம் என அனைத்தும் நிறைந்த நகரமாகும்.
இந்த நிலையில் கோயமுத்தூர் நகரத்தின் சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு, நகரின் மேம்பாட்டுக்கு இந்த புறவழிச்சாலைகள் பெருமளவில் உதவும். தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிடப்பட்ட இந்த பணிகள் முடிகின்ற காலக்கட்டத்தில் தொழில்துறை முதலீட்டாளர்கள் முதல் அனைவரின் கவனம் கோயமுத்தூர் பக்கம் திரும்பும்.
தமிழ்நாட்டிலிருந்து ஒசூர் வழியாக மைசூர் செல்வோர் மைசூர் நைஸ் ரோடு என்று அழைக்கப்படும் புறவழி சாலையை பயன்படுத்துகின்றனர். இது பெங்களூர் புறநகரான எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து நகரத்துக்குள் வராமலேயே மைசூர் செல்வதற்கான புறவழிச்சாலையாக அமைந்துள்ளது.

இது பெருமளவிலான நேர விரயம், போக்குவரத்து செலவினங்களை குறைக்கின்றன. அதனடிப்படையில், கோயமுத்தூரின் இந்த இரண்டு புறவழிச்சாலைகளும் போக்குவரத்து நேர விரயத்தை தவிர்க்க உதவும்.
தற்போதுள்ள எல் அண்ட் டி பைபாஸ் இன்னும் ஐந்து வருடங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழக்கமான சாலையாக மாறிவிடும். காரணம் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட், தொழில் கூடங்கள் அமைப்பு, நகரமயமாதல், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வட, தென் மாவட்ட, கேரளா நோக்கிய வாகன போக்குவரத்து அதிகரிக்கும்.
இதனால், தற்போதைய எல் அண்ட் டி பைபாஸ் போக்குவரத்து நெரிசலுடன் பயணிக்கும். இதனை தடுக்கும் விதமாக ”ஈஸ்டர்ன் கிரீன் ஃபீல்டு ரிங் ரோடு” மற்றும் கணேசபுரம் முதல் கர்நாடகா வரை "NON STOP 96 கி மீ" Green Field Bypass அமையும், இவ்வாறு அவர் கூறினார்.
லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்துருக்கு - தொழில் துறையினர் மகிழ்ச்சி.
சாலை கட்டமைப்பு எந்த அளவுக்கு தொழில் துறைக்கு உதவும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கான பதிலை சிம்பிளிசிட்டி செய்திகுழு தொழில் அமைப்புகளிடம் பேசியதன் அடிப்படையில், இந்த இரண்டு புறவழிச் சாலைகளும் தொழில் வளத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்கின்றனர்.
சிவகுமார், காட்மா சங்க தலைவர்: இந்த புறவழிச்சாலை தொழில் துறையின் ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்துக்கு பயனுள்ளதாக அமையும். போக்குவரத்து செலவினங்களை பெருமளவில் குறைக்கும் விதமாக இது அமைந்துள்ளது.
பெரிய நிறுவனங்களுக்கான ஜாப் ஆர்டர் செய்து தரும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெருகும். அதே போன்று, மிக முக்கியமாக பன்னாட்டு நிறுவனங்களிடையே இந்த போக்குவரத்து கட்டமைப்பு ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
பைபாஸ் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது காட்மா மட்டுமின்றி கோயமுத்தூரில் உள்ள இதர தொழில் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.
மொத்தத்தில் இந்த இரண்டு - ”ஈஸ்டர்ன் கிரீன் ஃபீல்டு ரிங் ரோடு” மற்றும் கணேசபுரம் முதல் கர்நாடகா வரை "NON STOP 96 கி மீ" கிரீன் ஃபீல்டு பைபாஸ் சாலைகளும் கோயமுத்தூருக்கு லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்துருக்கிறது, என்றால் அது மிகையல்ல.