பீளமேடு அருகே நடந்து சென்றவர்களிடம் உதவி கேட்பது போல் நடித்து வடமாநில இளைஞர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: பீளமேடு பகுதியில் உள்ள ஹோட்டல் அராபியன் நைட்ஸ் என்ற உணவகத்தில்சைனிஸ் மாஸ்டராக அஷிக்குல் அல் இஸ்லாம்என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சஜாய் பதார் கிராமத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில் இவர் பீளமேட்டில் உள்ள உணவகத்தில் வேலை முடிந்து, தனது சொந்த ஊரை சேர்ந்த நண்பரை சந்திக்க லன்கா கார்னர் பிரிட்ஜ் வழியாக அவரது நண்பர் அறைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் தனது நண்பரிடம் பேச வேண்டும் என்று தெரிவித்து அஷிக்குலிடம் அலைபேசி வாங்கியுள்ளார்.
ஆனால் அலைபேசியைவாங்கியவுடன் அஷிக்குல் அல் இஸ்லாம் மீது அந்த நபர் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து அவரிடம் இருந்த ரூ.7,000 பணம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளார்.
அப்போது அஷிக்குல் அல் இஸ்லாம் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து,வழிப்பறி கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் வடகிழக்கு மாநில வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மர்மநபரின் தாக்குதலில் தலையின் இடது பக்கம் மற்றும் மேல் உதட்டில் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக 392, 397 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த உக்கடம் போலிசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.