கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் நள்ளிரவில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அவ்வழியாக சென்ற கார் மற்றும் வேன் போன்ற வாகனங்களை தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
நீலகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சாலைகளிலும் சுற்றித்திரிந்து வருகின்றன.
இந்நிலையில் கோத்தகிரி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள முள்ளூர் பகுதியில் நள்ளிரவில் யானை ஒன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்துள்ளது. சாலையில் சுற்றித்திரிந்த யானையை கண்ட வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இதன் காரணமாக அவ்வழியாக வந்த 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதில் ஒரு சிலர் யானையை புகைப்படம் எடுக்கும் முற்பட்டதால் திடீரென கோபமடைந்த யானை 5 மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் சென்ற கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் சிலர் வாகனத்தை வேகமாக திருப்பிக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து அந்த ஒற்றை யானை, தேயிலை தோட்டத்திற்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து அவ்வழியாக சென்றனர்.
இந்நிலையில், யானைகளின் அருகில் செல்ல வேண்டாம் என்றும், யானைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.