சிம்ஸ் பூங்காவில் இருந்த தேன்கூடுகள் கலைந்ததால், சுற்றுலாப் பயணிகளை தேனீக்கள் தாக்க துவங்கியது. புகை மூட்டி தேனீக்களை விரட்டும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால், சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: தமிழகத்தின் பிரபலமான சுற்றுலம் நீலகிரி மாவட்டம் ஆகும். அங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் நூற்றுகணக்கில் வந்து செல்கின்றனர்.
அங்கு ஊட்டி படகு இல்லம், ரோஸ் கார்டன், தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி தேயிலை தோட்டம், சூசைட் பாயிண்ட் என சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடங்கள் அதிகமாக உள்ளன.
இன்று, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இருந்த தேன் கூடுகள் கலைந்தன. இதனால், தேன் கூடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான தேனிகள் வெளியேறியது.
பூங்கா முழுவதும் பறந்த தேனீக்கள் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை தாக்க தொடங்கியது. இதனால் பதட்டமடைந்த சுற்றுலாப் பயணிகள், தங்களை பாதுகாத்து கொள்ள அங்கும் இங்கும் ஓடினர். இதனால், பூங்கா முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது.
தேனீகள் தாக்கியதில் பூங்கா ஊழியர் சிவக்குமார் உட்பட கேரளாவை சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து, பூங்கா ஊழியர்கள் 5 இடங்களில் புகை மூட்டி தேனீக்களை விரட்டினர்.
உடனடியாக, பூங்காவை விட்டு சுற்றுலாப் பயணிகள் வெளியேறியதால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தேனீக்கள் பிரச்சனை காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.