வெள்ளலூரில் உள்ள குப்பைக்கிடங்கால், சுகாதார சீர்கேடு ஏற்படுவடுவதாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தீர்ப்பு அமல்படுத்தப்பட்டதா..? என 2 நாள் ஆய்வுக்காக, கண்காணிப்பு குழு நாளை கோவைக்கு வருகை தரவுள்ளது.
கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கு மேலாண்மை குறித்த தீர்ப்பை அமல்படுத்தியது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள பசுமை தீர்ப்பாயத்தின் கண்காணிப்பு குழு நாளை கோவைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளின் கூடாரம் - வெள்ளலூர்
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டி தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. வெள்ளலூர் என்பது கோவையின் புறநகர் என்றாலும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்த 66 ஏக்கர் நிலப்பரப்பை மாநகராட்சி நிர்வாகம் தன் வசப்படுத்திக் கொண்டு, அங்கு பிரம்மாண்டமாக குப்பை கிடங்கை அமைத்துள்ளது.

நாள்தோறும் மாநகராட்சி பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள், டன் கணக்கில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதனால் சுற்றுப்புற சூழல், தூய்மை, இயற்கை மேலாண்மை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் பிரித்து மறு சுழற்சி செய்தும் வருகின்றனர்.
குளறுபடியான நிர்வாகமும் - குப்பை கிடங்கால் குமுறும் பொதுமக்களும்
வெள்ளலூரை பொறுத்தவரையில் கோவை புறநகர் என்றாலும், அங்கும் பெருமளவில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அப்பகுதியில் பெருமளவில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், வெள்ளலூர் குப்பை கிடங்கில் மறுசுழற்சி பணிகள் உள்ளிட்ட இயற்கையை பாதுகாக்கும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவது, அவ்வப்போது சமூக விரோதிகளால் குப்பைகள் எரியூட்டப்பட்டு சுற்றுப்புறத்தை புகை மண்டலமாக மாற்றி சீரழிப்பதும், இதனால் பொதுமக்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாவதும் என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறியதால், வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் பொதுமக்களின் குமுறலுக்கு உள்ளானது.
வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
வெள்ளலூர் வாசிகளின் வேதனை உச்சம் தொடச் செய்த குப்பை கிடங்கை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாத நிலையில் சமூக ஆர்வலர் ஈசுவரன் என்பவர், வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி கடந்த 2013 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனடிப்படையில், 2018ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள 15.5 லட்சம் கன மீட்டர் குப்பைகளை ஒரு ஆண்டுக்குள் அழித்து விடுவதாகவும், வெள்ளலூருக்கு வருகின்ற குப்பைகள் 50 விழுக்காடு குறைக்கப்படும் என்றும் உறுதி அளித்த மாநகராட்சி, அதற்காக 69 மைக்ரோ கம்போசிடிங் செண்டர்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
வாக்குறுதியை நிறைவேற்றாத அதிகாரிகள், ஆட்சியாளர்கள்
பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தது. குறிப்பாக, குப்பைகளை அழிக்க மைக்ரோ கம்போசிடிங் செய்யவும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தது. ஆனால் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்ததை முழுமையாக மாநகராட்சி நடைமுறைப்படுத்தவில்லை என்பதே நிதர்சனம்.
இதுவரை, 35 மைக்ரோ கம்போசிடிங் சென்டர் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது நிலையில், அதிலும் ஒரு சில மையங்கள் மட்டுமே செயல்பாட்டு வருகிறது என்பது சமூக ஆர்வலர் ஈசுவரனின் குற்றச்சாட்டு. மொத்தமாக உள்ள 15.5 லட்சம் கன மீட்டர் குப்பைகளில் 9 லட்சம் கன மீட்டருக்கு மட்டுமே பையோமைனிங் திட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், அதுவும் முழுமையடையவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மீண்டும் பசுமை தீர்ப்பாயத்தை நாடிய சமூக ஆர்வலர்
வெள்ளலூருக்கு வரும் குப்பைகளை பாதியாக குறைக்காததால், அந்த குப்பைகளும் தினசரி அதிகரித்து பழைய நிலைமையை விட கூடுதலாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அளித்த எந்த உறுதி மொழியையும் கடந்த அதிமுக ஆட்சியும் தற்போதைய திமுக ஆட்சியும் நிறைவேற்றாத காரணத்தால், தொடர்ந்து வெள்ளலூர் மக்கள் கடும் சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உறுதியளித்து, நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் இன்னமும் 15 சதவீத பணிகள் கூட நிறைவேறாத காரணத்தால், மீண்டும் புதுடில்லி பசுமை தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர் ஈசுவரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து, வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றுள்ளார்.
விஸ்வரூபம் எடுத்த வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் - குப்பை கிடங்கை பார்வையிட வரும் பசுமை தீர்ப்பாயம்
வெள்ளலூர் குப்பை கிடங்கு மேலாண்மைக்காக பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை முறையாக அமல்படுத்துவதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு குழு, வரும் 6 மற்றும் 7 தேதிகளில் கோவைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்காணிப்பு குழு, வரும் 6 ஆம் தேதி மாலை 3 மணியளவில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பின்னர், கோவை மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 35 உர தயாரிப்பு மையங்களில் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அடுத்த நாள், அக்டோபர் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதே நாள், பிற்பகல் 12:30 மணிக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிவு கிடைக்கும் வரை, முடிவடையாது எங்கள் போராட்டம் - முழங்கும் வெள்ளலூர் வாசிகள்
கடந்த 10 ஆண்டுகளக்கு முன்பு வெள்ளலூரை சுற்றியுள்ள சுமார் ஒரு லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தையும், கோவையின் சுற்றுச்சூழலையும் காப்பதற்காக தொடங்கிய போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஜனநாயக ரீதியான போராட்டம் சட்டரீதியான போராட்டம் என பசுமை தீர்ப்பாயம் வரை பொதுமக்கள் சென்றிருக்கின்றனர் . முழு தீர்வு கிட்டும் வரை மக்கள் நிம்மதியாக வாழ்கின்ற வரை முழக்கமும் போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என வெள்ளலூர் பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.