உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக சுமார் 4 லட்சம் எண்ணிக்கையிலான, 70 வகையான மலர்ச்செடிகள் மூலம் அலங்காரங்கள் அமைக்கும் பணிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக மலர்த்தொட்டிகள் மூலம் அலங்காரங்கள் அமைக்கும் நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இந்தாண்டின் 2ஆவது சீசனை முன்னிட்டு பூங்காவை அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் சுமார் 4 லட்சம் எண்ணிக்கையிலான பல்வேறு வகையான மலர்ச் செடிகள் கொண்டு மலர்பாத்திகள் அமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.
தற்போது இந்த மலர்ச்செடிகள் அனைத்தும் பூத்து சுற்றுலாப் பயணிகளின் கண்ணிற்கு விருந்தாக காட்சி அளித்து வருகின்றன.
இந்நிலையில், சுற்றுலாப்பபணிகளை கவரும் வகையில் இரண்டாம் பருவத்திற்கான 70 வகை மலர்ச்செடிகள் பிற மாநிலங்களான கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, போன்ற இடங்களிலில் இருந்து விதைகள் பெறப்பட்டுள்ளன.
அதில், டேலியா, சால்வியா, இன்காமேரி கோல்டு, பிரஞ்ச்மேரி கோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், டியூப்ரஸ்பிகோனியா, ஜெரேனியம் உள்ளிட்ட 10 ஆயிரம் மலர்த்தொட்டிகள் மலர்க்காட்சி திடலில் அடுக்கி வைத்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் 2000 மலர்த்தொட்டிகளில் மலர்க்காட்சி திடலில் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், நீலகிரியை நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றும் பொருட்டு. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரணி இல்லம் புல்வெளி மைதானத்தில் நெகிழிப்பையை தவிர்த்து மஞ்சப்பையினை பயன்படுத்தும் வாசகங்கள் மலர்த் தொட்டிகள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த அலங்காரம் செய்யும் பணிகளின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித், தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி மற்றும் இதர அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மலர்க்காட்சித் திடல் சுற்றுலா பயணிகளுக்காக இன்று முதல் ஒரு மாத காலம் திறந்துவைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.