கோவையில் மகாத்மா காந்தி நினைவகத்தின் திறப்பு விழா இன்று (02.10.2022) காலை 9.30 மணிக்கு கோவை, செட்டிபாளையம் மெயின் ரோடு, போத்தனூரில் நடைபெற்றது. இந்த நினைவகத்தை புகழ்பெற்ற காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்துவைத்தார்.
கோவை: அக்டோபர் 02 ஆம் தேதி மகாத்மாவின் 153 வது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
கோவையில் மகாத்மா காந்தி நினைவகத்தின் திறப்பு விழா இன்று (02.10.2022) காலை 9.30 மணிக்கு கோவை, செட்டிபாளையம் மெயின் ரோடு, போத்தனூரில் நடைபெற்றது.

இந்த நினைவகத்தை புகழ்பெற்ற காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான திருமதி.கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்துவைத்தார்.
மூன்று முறை கோவைக்கு வந்த மகாத்மா
கோவை மாநகரம் மகாத்மாவுடன் ஒரு சிறப்பான பிணைப்பைக் கொண்டிருந்தது. இப்பகுதியின் தேசிய உணர்விற்கும், அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார் மகாத்மா. அவர் மூன்று முறை கோவைக்கு வந்துள்ளார், இங்கு அவருடன் தொடர்புடைய வரலாற்றுச் சின்னங்கள், என்றும் அழியாச் சுவடுகளாக உள்ளன..
1934-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் போத்தனூரில் மகாத்மா காந்தி தங்கிய ஜி டி நாயுடு குடும்பத்தின் எளிய ஓட்டு வீடு, இன்றும் முக்கிய வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது. இந்த இல்லம், மகாத்மாவின் நினைவையும் சிந்தனைகளையும் உள்ளடக்கியது.
இந்த எளிய தங்குமிடம் 1934 முதல் இன்று வரை பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டும், மகாத்மாவின் நினைவைப் போற்றியும் காட்சியளித்துக் கொண்டுள்ளது. கோவை பகுதியில் நடைபெறும் முதல் நாள் பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய பின் இப்பகுதியின் முக்கிய தேசிய தலைவர்களுடனான சந்திப்பை முடித்து விட்டு அன்று இரவு ஜி டி இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்துள்ளார் மகாத்மா.
அப்போது டி.எஸ்.அவினாசிலிங்கம் ஐயா அவர்கள் இவ்வீட்டை ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்காக உபயோகப்படுத்தினார். ஹரிஜன மக்களின் நலன் மற்றும் விடுதலை ஆகியவற்றை கருத்தியல் ரீதியாக ஆதரித்த மகாத்மா தங்குவதற்கு இந்த எளிய இடம் ஒரு ஏற்ற இடமாக அமைந்திருந்தது. குறிப்பிடதக்க நிகழ்வாக மறுநாள் 1934ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி காலை ஸ்ரீ அவினாசி லிங்கம் ஐயா அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கட்டடத்திற்கு இந்த இல்லத்திலேயே அடிக்கல் நாட்டினார். பின்னர் அந்த கல்வெட்டு நிரந்தரமாக பெரியநாயக்கன்பாளையத்தில் தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது.
மகாத்மாவிற்கும் கோவைக்கும் இடையிலான வரலாற்று தொடர்பை பிரதிபலிக்கும் நினைவகம்.
இந்த நினைவகம் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. 1. மகாத்மாவிற்கும் கோவைக்கும் இடையிலான வரலாற்று தொடர்பை பிரதிபலிக்கும் புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் ஓவியங்களுடன், மகாத்மா பயன்படுத்திய பொருட்களின் பிரதிகளைக் காட்சிப்படுத்தும் கண்காட்சிப் பகுதி. 2. மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை விளங்கச் செய்து, பார்வையாளர் களுக்கு உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலுக்கு ஆதாரமாக விளங்கும் புகைப்படப் பகுதி. 3. மகாத்மாவைப் பற்றிய அரிய நூல்கள், மகாத்மாவின் சிறப்புக்குரிய கடிதங்கள் மற்றும் மகாத்மாவின் இலக்கியங்களைக் கொண்ட நூலகம். 4. இங்கு மகாத்மாவின் தனித்துவமான ஆவணப்படங்களும் திரையிடப்படும்.
மேலும் சத்யம், தர்மம் மற்றும் அகிம்சை ஆகிய அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி விவாதிக்க ஒரு உரையாடல் கூடமும் அமைந்துள்ளது.
இந்நினைவகம் ஒரு நினைவுச் சின்னமாக மட்டுமல்லாமல் ஒரு கற்றல் மையமாகவும் செயல்படும். ஆண்டு முழுவதும் பொதுமக்கள், 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த நினைவிடத்திற்கு வருகை தருவார்கள். மாதாந்திர விரிவுரைகள் தவிர பயிற்சித் திட்டங்கள் பட்டறைகள் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி முகாம்களை நடத்துவதற்கு இவ்வளாகம் பயன்படுத்தப்படும்.
விழாவில், ஜி.டி. குழுமங்களின் நிர்வாக இயக்குனரும் மகாத்மா காந்தி நினைவகத்தின் துணைத் தலைவருமான ஜி.டி. கோபால் பேசியதாவது:-
இந்த விழாவில் மூன்று பேருக்கு முக்கியமாக நன்றி செலுத்த வேண்டும்; முதலாவதாக எனது தந்தை, அடுத்து, கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் சங்கர் வானவராயர், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியினருக்கும், ஜிடி குழுமத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு செயல்பாடுகளுடன் இதை உருவாக்கியுள்ளனர்.
1998-ம் ஆண்டு, ஜெர்மனியிலிருந்து நான் இந்தியாவிற்கு திரும்பி, எனது தொழிலை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது தொழிலாளர்கள் பிரச்னை இருந்தது. அந்த சமயத்தில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி ஆர்டர் இருந்தது. அப்போது இங்குள்ள ஷெட்டிற்கு இயந்திரங்களை மாற்றி வேலையை துரிதப்படுத்துமாறு எனது தந்தை தெரிவித்தார்.
அப்போது ஒரு டிரக் உள்ளே வர வேண்டும்;ஆனால் அது நீண்டதாக இருந்ததால் வர இயலவில்லை. பொதுமேலாளர் என்னிடம் வந்து, “வண்டி உள்ளே போகாது, வந்து பாருங்க" என்றார். அப்போது, அருகில் மோசமான நிலையில் ஒரு வீடு இருந்தது. அப்பாவிடம், “பழைய வீடு ஒன்னு இருக்குது, அதில் ஒரு மூலையை இடித்து விட்டால் டிரக் உள்ளே போகும்" என்றேன்.
அதற்கு அவர், “அந்த வீட்டை தொடாவே, தொடக் கூடாது," என்றார். "இடிந்து போன நிலையில் இருக்குது ஏன் தொடக் கூடாது, அப்படி என்ன அதற்கு முக்கியத்துவம் ?" என்றேன். இடிந்து போகும் நிலையில் இருப்பதை சரி செஞ்சுக்கலாம்; உன்னோட மெஷின வேற இடத்துக்கு மாத்திக்கலாம… சின்ன மெஷின இங்க வச்சுக்குங்க..," என்றார்.
மீண்டும் நான் வற்புறுத்திக் கேட்டபோது, “ஆமா, இங்கு மகாத்மா காந்தி வந்து தங்கினாரு" என்றார். என்னால் நம்ப முதயவில்லை. அவர் வந்து தங்கினதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா" எனக் கேட்டபோது, அருகில் இருந்த எனது மாமா வெங்கிடபதிக்கு ரெம்ப கோவம் வந்துருச்சு. என்ன இப்படி கேக்கறே நீ... உங்க தாத்தாவ தேடி எத்தனையோ பேரு வந்திருக்காங்க... தலைவர்கள், மந்திரிகள், ராஜாஜி, எத்தனையோ பேரு இங்க வந்திருக்காங்க.
உங்க தாத்தா யாரையும் தேடிப்போகல. அது போல மகாத்மா காந்தி வந்தாரு.. அவிநாசிலிங்கம் செட்டியார் சொன்னதுனால, இங்க வந்து தங்கினாரு. இதுக்கு என்ன ஆதாரம் வேணும். வீடுமேல கை வைக்காத அவ்வளவு தான்னு", சொல்லிட்டாரு.
நான் ரெம்ப வருஷமா மகாத்மா காந்தி வந்து தங்கினாருனு யாருகிட்டேயும் சொல்லல. யாராவது ஆதாரம் இருக்கானு கேட்டங்கனா, எங்க போயி காமிக்கிறது ஆதாரத்தை? அந்த ஆதாரம் வந்து, இந்த வீட்டை புதுப்பித்து சிலை வைத்த போது, அங்கு தான் இந்த இடத்துக்கு திருப்பம் வந்தது.
ஒரு நாள் சாயங்கலாம், கிருஷ்ணராஜ் வானவராயர் இந்த வழியாக கார்ல போயிருக்கார். ஒரு பேப்பர்ல ஒரு செய்தியும் வந்தது. அவரு எங்க அம்மாவுக்கு போன் பண்ணி, "என்ன இந்த மாதிரி நடந்திருக்கு, யாருக்கும் தெரியாது கோயம்புத்தூர்ல." சொல்லிவிட்டு, நேராக வீட்டுக்கு வந்தாரு. எங்க அப்பாவை சந்திச்சாரு. இத ரெம்ப சாதாரணமாக பண்ணக் கூடாதுங்க... இந்த தலைமுறைக்கு காந்தியின் கொள்கைகளை கொண்டு வரணும், அதற்கு தகுந்த மாதிரி இந்த இடத்தை பண்ணணும்னு சொல்லி இந்த இயக்கம் ஆரம்பித்தது.
தற்போது, இந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எனது தந்தையின் கனவு நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவிற்கு கோவை குமரகுரு கல்வி குழுமங்களின் தலைவரும் மகாத்மா காந்தி நினைவகத்தின் தலைவருமான டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமையேற்று பேசியதாவது:-
மகாத்மா காந்தியை எளிதாக எடைபோட்டு விடாதீர்கள். அவர் உலகறிந்த, 20-ம் ஆண்டின் இணையற்ற மாமனிதர். அகிம்சா முறையில் சுதந்திரம் வாங்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர். எத்தனை கோடிகள் செலவு செய்து நினைவிடம் அமைத்தாலும், அவர் வந்து உறங்கிய இந்த இடம் எவ்வளவோ மேலானது. யார் வேண்டுமானாலும் குற்றம் சொல்லலாம், ஆனால், எங்களுக்கு தெரிந்ததை செய்திருக்கிறோம்.
1934 ம் ஆண்டில், பிப்ரவரி 6, 7 ல் மகாத்மா காந்தி தங்கியிருந்தார் என்பதை அறிந்துள்ளோம். 85 ஆண்டுகளாக கேட்பரற்று கிடந்த இந்த இடம், புத்துணர்வு பெற்றுள்ளது. சத்தியம் என்றும் தோற்காது என்பதற்கு இது முன் உதாரணம். அவிநாசிலிங்கம் செட்டியார் இது குறித்து அவரது நூலில் எழுதியுள்ளார். ஆர்.கே சண்முகம் செட்டியாரும் இங்கு தங்கியுள்ளதை உறுதிப்படுத்தி எழுதியுள்ளார்.
இந்த நினைவிடத்தில், உங்கள் குழந்தைகளுடன் வாருங்கள். இங்கு அமர்ந்து மகாத்மா காந்தியை உணர்ந்து தியானம் செய்ய வேண்டும். இங்கு அனைத்து பணிகளும் முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது. இவ்வளவு சின்ன இடத்தில் அத்தனையும் வைத்துவிட முடியாது. அவர் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், படங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர்கிங், உள்ளிட்ட தலைவர்கள் போற்றும் மனிதராக மகாத்மா காந்தி இருந்து வருகிறார். மகாத்மா காந்தியை பற்றி யார் பேசுகின்றனர்? பொருளாதாரத்தையும், அரசியலை மட்டுமே பேசி வருகின்றனர். காந்தியை பற்றி பேச இங்கு அரங்கம் ஏற்படுத்தியுள்ளோம். இனி இங்கு காந்தியை பற்றிய கருத்தரங்குகள் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மையத்தை திறந்து வைத்த திருமதி.கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அவர்களள், வினோபா பாவே மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட உயரிய தலைவர்களுடன் பணியாற்றிய புகழ்பெற்ற காந்தியவாதியும் சமூக ஆர்வலருமாவார். மேலும் 8 தசாப்தங்களாக ஒடுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டு வரும் திருமதி.கிருஷ்ணம்மாள் பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், நிலமற்றவர்கள் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளார்.
அவரது மறைந்த கணவர் சங்கரலிங்கம் ஜகந்நாதனுடன் சேர்ந்து, கிருஷ்ணம்மாள், காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, கிராமப்புற நிலமற்றவர்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மறுபங்கீடு செய்யம் “பூதான்” (நிலம் பரிசு) இயக்கத்தில் வேரூன்றியிருந்த "லேண்ட் ஃபார் தி டில்லர்ஸ் ஃப்ரீடம்" என்ற அமைப்பை நிறுவினார்.
விழாவில் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் பேசியதாவது:-
திருப்புர் குமரன் பிறந்த மண் இது. சுதந்திரத்துக்கு பின் எவ்வளவோ காரியங்கள் நடந்து விட்டன. நிம்மதி தான் இல்லை. அமைதியை ஏற்படுத்தவே இப்போது இந்த நினைவிடம் உருவாகியுள்ளது. திருப்புர் குமரன் போன்றே காந்தியும் நம் ரத்தத்தில் ஊறிப்போனவர். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. அதை சீரோடும் சிறப்பாக நிறைவேற்றிட, காந்திய வழியில் தொடருவோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கோயம்புத்தூர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், சுவாமி நிர்மலே சானந்தா பாராட்டி பேசியதாவது:-
அரிசன மாணவர்களின் முன்னேற்றத்துக்காக மேற்கொண்ட பயணத்தின்போது தான் இந்த வீட்டிற்கு வந்தார் காந்தி. அதை செயல்படுத்தும் செயல்திறமாக இந்த வீடு விளங்குகிறது. இதை நினைவிடமாக மாற்ற, வானவராயர் முன்னெடுத்துள்ளது இறைவனின் அருள். இந்த இடம், பெரும் புதையலாக உள்ளது. வாழ்நாளில் ஒரு திட்டமாக இதை அர்ப்பணித்துள்ளார். என்று பேசினார்.
கோவை மாவட்ட ஆட்சியளர் டாக்டர். ஜி.எஸ். சமீரன் பேசும் போது:-
இந்த நினைவிடத்துக்கு வர தேவையான கட்டமைப்புகள், வசதிகளை மாநகராட்சி, மாநகர காவல், மாநகராட்சி சார்பில் செய்து தருவோம். 2011ம் ஆண்டு இந்தியாவின் கடைசி கிராமமாக உள்ள மானோர்க் வில் காந்தி ஜெயந்தி கொண்டாடியது மறக்க இயலாது. காந்தியடிகள் கோவைக்கு வந்தது மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான துவக்கம் இந்த மண்டில் தான். அவர் விதைத்த விதை, இங்கு வளரும். இவ்வாறு அவர் பேசினார்.
அவிநாசிலிங்கம் பல்கலைகழகத்தினன் முன்னாள் துணை வேந்தர் குழந்தைவேலு அண்ணா பேசும் போது:-
அவிநாசிலிங்கம் செட்டியார் ஐயா, கோயம்புத்தூர், நீலகிரி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். காந்தியின் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்ய வேண்டியது அவரது பொறுப்பாக இருந்தது. ராமகிருஷ்ணா வித்யாலாவில் காந்தியடிகள் அடிக்கல் நாட்டினார். அப்போது ராமகிருஷ்ணா வித்யாலத்திற்கு நிலம் எதுவும் இல்லை. 88 ஆண்டுகளுக்கு பின் தற்போது பெரியநாயக்கன்பாளையத்தில் 300 ஏக்கர் நிலம் உள்ளது. 9 ஆயிரம் பேர் படிக்கின்றனர். இதன் கிளை ஸ்தாபனமான அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் 300 ஏக்கர் நிலம் உள்ளது.
அங்கும் 9 ஆயிரம் பேர் படிக்கின்றனர். காந்தியடிகள் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அப்போது குண்டூசி கூட வெளிநட்டிலிருந்து வந்தது. போனா வாங்குவதற்கு 3 வாரம் காத்திருந்தோம். இப்போது இந்தியா பெரிய கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிக்கிறோம். தற்போது இந்தியா 5வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
காந்தியடிகள் தொட்டதெல்லாம் துலங்கும். பத்திரிக்கையை படித்தால் பல குறைபாடுகள் இருப்பது தெரிய வருகிறது. காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றாததால் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. காந்திய கொள்கைகளை கடைபிடித்தால் நாடு முன்னேற்றம் காணும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் விழாவில் கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி ஆணையாளர் எம். பிரதாப், மகாத்மா காந்தி நினைவகத்தின் பொருளாளர் ஆகிலா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பாரதிய வித்யா பவன் மாணவர்களால் தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.
