ஆ ராசா எம்.பிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய கோவை மாவட்ட மாநகர பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி 15 நாள் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் அவரை இன்று சிறையில் சந்தித்த முன்னாள் பாஜக அமைச்சர் சி பி ராதாகிருஷ்ணன் தமிழக அரசு வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.
கோவை: கடந்த 6-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா, இந்துக்களை இழிவுபடுத்தும் படியாக பேசி உள்ளார் என்று தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களையும் கண்டனக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
ஒருபுறம் ஆ ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து அவர் பேசியது அவர் கருத்தல்ல, மனு சாஸ்திரத்தில் இந்துக்களை பற்றி எழுதப்பட்டிருப்பதை தான் அவர் பேசினார் என்று பேசி வந்தாலும், மறுபுறம் அவர் பேச்சு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆ.ராசாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தும் அவர் பேசியத்திற்கு மன்னிப்பு தெரிவிக்க கூறி பிஜேபி மற்றும் இந்து அமைப்பினர் கண்டனக் கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை பீளமேடு பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமையன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஆ.ராசாவை கண்டித்து கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு போலீஸ் காவல் இல்லாமல் கோவை மாவட்டத்திற்குள் காலை வைத்துப் பாருங்கள் என மிரட்டல் விடுக்கும் விதமாகவும், பெரியார் குறித்தும் அவதூறாக பேசி இருந்தார்.
இவர் பேசிய காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலானதால் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி மீது கலகத்தை தூண்டுதல், அவதூறு பரப்புதல், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் சிறையில் இருக்கும் பாலாஜி உத்தமராமசாமியை இன்று சந்தித்து விட்டு சிறைச்சாலை முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்:
ஒரு சட்டம் இயற்றப்படுவது மக்களுக்கான பாதுகாப்பை தருவதற்கு தான். தீண்டாமைக்கு எதிராக பி சி ஆர் சட்டம் இயற்றப்பட்டது. காலம் காலமாக இருந்து வருகின்ற வன்கொடுமையான, மனிதனை மனிதன் தீண்டத்தகாதவனாக நடத்துகின்ற போக்கை மாற்ற வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட சட்டத்தை ஒரு அரசே தவறாக பயன்படுத்தி மாற்று அரசியல் இயக்கத்தை சார்ந்த தலைவர்களை கைது செய்துள்ள நிகழ்வு இந்திய பாரத வரலாற்றில் இதுவே முதன்முறை.
மாநில அரசு பி சி ஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி பிஜேபினுடைய கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. ஒரு அரசே சட்டத்தை தவறாக பயன்படுத்துகிற போக்கு என்பது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிவிடும்.
ஆ ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம் அதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைப்பாரே ஆனால், இது தான் திமுகவினருக்கான சரிவின் தொடக்கம். இந்த சரிவில் இருந்து ஒரு போதும் மீள முடியாது.
2006இல் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் கொண்டுள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற இஸ்லாமிய அமைப்பு சமீபத்தில் வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் ரூ.120 கோடிக்கும் அதிகமான தொகையை பெற்று இந்த அமைப்பிற்கு சொந்தமான வங்கிகளில் வைத்திருக்கும் காரணத்தினாலும், பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு பிஎஃப்ஐ அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை வரவேற்கத்தக்கது. காரணம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் பாப்புலர் பிரண்ட் ஆப் பாகிஸ்தான் ஆக தான் இந்த மண்ணில் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்போடு தொடர்பு உள்ளவர்கள் வருங்காலத்தில் வருத்ததிற்கு உள்ளாவார்கள், இவ்வாறு அவர் பேசினார்.