மேட்டுப்பாளையம் காமராஜர் நகர் நாடார் காலனி பகுதியில் வசித்து வரும் இந்து இளைஞர் முன்னணி நகர பொறுப்பாளரான ஹரிஷ் (21) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் கடந்த வாரம் ஒன்பது இடங்களில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அந்த குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், கோவை மீண்டும் அமைதியான நிலைமைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இந்து அமைப்பின் நிர்வாகி ஒருவரது வீட்டில் கற்கள் எறியப்படும், கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் காமராஜர் நகர் நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ஹரிஷ் (21). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டபடிப்பு படித்து வருகிறார். இவர், இந்து இளைஞர் முன்னணி நகர பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன் பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் விசாரணையை நடத்தினார்.
மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி, காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள், செல்வநாயகம், முருகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்து முன்னணி கோவை கோட்டச் செயலாளர் ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், துணைத் தலைவர் தங்கவேலு, தனபால் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினர்.
அமைதியை சீர்குலைக்கும் இது போன்ற சம்பவங்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.