கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று பேசினார்.
கோவை: கோவை பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க அரசை கண்டித்தும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முன்னாள் எம்.பி சிபி.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் என கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசியதாவது:

ஆ.ராசாவின் கருத்துகளுக்கு இந்துகளுக்கு உடன்பாடில்லை, இந்துக் கடவுள்களை திமுகவினர் இழிவுப்படுத்தி வருகின்றார். இந்து எதிர்ப்பு என்பதை கொள்கையாகவே திமுக வைத்துள்ளனர். இன்று நிலைமை மாறியிருக்கிறது.
இந்துக்கள் ஆயிரக்கணக்கான பேர் நின்று திமுகவை எதிர்த்து கேள்வி கேட்போம். தமிழகத்தில் பாஜக உள்ளே வந்துவிடுவார்கள் என்ற நிலையில் திமுகவினர் பயந்துள்ளனர். அந்தளவிற்கு பாஜக வளர்ச்சி பெற்றுள்ளது.
திமுக அரசியல் மேடையில் பேசுவதை, பெண்கள் உட்கார்ந்து கேட்க முடியாது. பாஜகவில் நாகரீகம் இருப்பதால் பெண்கள் உட்கார்ந்து கூட்டத்தில் கேட்க முடியும்.

தீண்டாமை மிகப்பெரிய கொடுமை. அதனை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ், பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக சாதியின் அடிப்படையில் சீட்டு வழங்குகிறது. ஆனால், மாறாக சமுதாயத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்களை தூக்கி விட பாஜக இருக்கிறது. பா.ஜ.க வினர் சாதிக்கு எதிரானவர்கள்.
இந்து சமுதாயத்தில் தீய பழக்கம், மூட நம்பிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் போராடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில், ராமனுஜர் குறிப்பிடத்தக்கவர். எல்.முருகனை மாநிலத் தலைவராகவும், பின் மத்திய அமைச்சராகவும் ஆக்கி, அழகு பார்த்தவர் பிரதமர் மோடி.

திமுகவில் முதல்வர் நாற்காலியில் ஆ.ராசா உட்கார முடியாது. இது தான் அவர்களின் சமூக நீதி. மதமாற்றத்திற்கு எதிராக மத மாற்றம் தவறானது என டாக்டர் அம்பேத்கர் சொன்னதை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியுமா..?
ஆ ராசா மதமாற்றத்திற்கு தூண்டுகிறார். இதற்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க வேண்டும்? சகோதர, சகோதரிகளை தவறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். கோவை பாஜக மாநகர் மாவட்ட தலைவரை பொய்யாக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இன்றைக்கு முதலமைச்சர் அறிக்கை கொடுத்திருக்கிறார். அவரது குடும்ப சேனல்கள் தான் அவரை பாராட்டுகின்றனர். உங்களை எங்கு குளிப்பாட்டி, எங்கு வைத்தாலும் முதலமைச்சர் மாறமாட்டார்.
கோவை மாநகரத்தில் போஸ்டர் ஒட்டக்கூடாது என ஆட்சியர் அனைத்து கட்சி கூட்டம் போட்டார். ஆனால், திமுகவினர் ஒட்டிய போஸ்டருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர், சட்ட விரோதமாக திமுகவினர் வைத்திருக்கக்கூடிய பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க முடியுமா?.
இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

இந்த இடத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சிறைக்குள் இருக்கிறார் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமி.

இன்று ஆயிரம் பாலாஜிகள் திரண்டு வந்து இருக்கிறீர்கள். சரித்திர கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல் துறை ஏவல் துறை போல நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
கிரேக்க வராலாற்றில் ஒரு மனிதன் சாகாவரம் வேண்டும் என்று நினைத்தான். அப்போது ஆண்டவர் வரம் கொடுத்தாராம், தண்ணீர் பட்ட இடத்தில் போர் செய்தால் நீ தோற்க மாட்டாய் என்று வரம் கொடுத்தார். அப்போது, அந்த மனிதனின் குதிங்கால் மட்டும் தண்ணீர் படாம இருந்தது. அப்படியாக திமுகவின் குதிங்காலாக இருக்கிறார் ஆ.ராசா. ராசா பேசிய பேச்சுக்கள் திமுகவிற்கு புதிதல்ல.

தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பேச்சுக்களை சகோதர, சகோதரிகள் எதிர்த்துள்ளனர். சமூக வலைதளம் உள்ள காலத்தில் வீட்டில் இருக்கும் ஒரு சகோதரி உடனடியாக அந்த பேச்சை பார்த்து விடுகிறார். 20 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு எதிர்ப்பு இல்லை. இப்போது தமிழர்கள் உங்கள் பேச்சுக்களை பார்க்கிறார்கள்.
அறிவாலயத்தில் ஒரு பிரச்சனையை மறைக்க, அடுத்த பிரச்சனை என்ன செய்யலாம் என திமுக தலைவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். 15 மாத காலமாக தஞ்சாவூர் முதல் கனியமூர் பள்ளி வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு வாய் திறக்கவில்லை. அந்த பிரச்சனை குறித்து பாஜகதான் பேசுகிறது.
ஒவ்வொரு மாதமும் ஒரு பிரச்சனைக்காக பா.ஜ.க தொண்டன் பேராடுகிறான். கோவையில் பயங்கரவாதிகள், ஆ.ராசா கருத்துக்கள் மற்றும் காவல் துறை அத்துமீறலை கண்டித்து வருகிறோம். அப்போது, தடியடி நடத்தும் காவல்துறையிடம் மாட்டிக்கொள்ளும் தொண்டனும் உள்ளான்.
ஆ ராசா பேசியது அனைத்தும் தந்தை பெரியாரின் மரண சாசான புத்தகத்தில் இருந்து பேசியதாக சொன்னார். அதே புத்தகத்தில், "சொல்றதுக்கு நாதியில்லையே, சிந்திக்க நாதியில்லையே ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பொண்டாட்டியை தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான். ஓட்டு வாங்குவதற்கு இதற்கு கவலை படமடட்டிறேனா. யார் இது நம்ம முன்னேற்ற கழகத்திற்காரன் தான். இந்த வேலைய ஏன் பன்றான். அவனுக்கு ஓட்டு தான் பெரிசு. இன்னும் கொஞ்ச நாள் போனா இது வழக்கத்தில் வந்துவிடும் என்று நம்புகிறான். பொண்டாட்டியை கூட கொடுத்துவிட்டு வாங்குகிறான் என்றால் அந்த பதவி அவ்வளவு உயர்வாக போச்சு..." - இதை நான் சொல்லவில்லை பெரியார்தான் சொன்னார்.

இதற்கு பெயர் தான் திராவிட மாடல் என முதலமைச்சர் கூறிவருகிறார். திராவிட மாடலுக்கு அர்த்தத்தை பெரியாரின் புத்தகத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடியும். பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐயை சேர்ந்தவர்களை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. நாங்கள் போட்ட பிச்சையில் முதலமைச்சர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அதனால் எங்கள் மீது கைவைக்க மாட்டார்கள் என்று நினைத்தால் அது நடக்காது.
கேரளா வல்லபுரத்தில் தவறு செய்த குற்றவாளிகளை, என்.ஐ.ஏ இந்திய விமானப்படை விமானத்துடன் சென்று கைது செய்தது. எனக்கு சி.ஆர்.பி.சி மற்றும் ஐ.பி.சி சட்டங்கள் தெரியும். 11 ஆண்டுகள் அதில் வாழந்திருக்கிறேன். கேரளாவை போல் இங்கு இருக்கிற தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடக்கும் என்பதை முதலமைச்சர் உணர்ந்துகொள்ள வேண்டும்.
முதலைமச்சர் நான் கடவுள், நான் கடவுள் என்று சொல்லி வருகிறார். அவரை நம்பக்கூடிய நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆத்துல குளிச்சுகிட்டு சேத்துல நடந்துவர்றவனை பார்த்து நாங்க நகர்ந்து செல்கிறோம் என்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான 1 கோடியே 10 லட்சம் பேரை மீட்டு கொண்டு வர ஆட்சிக்கு வர நினைக்கிறோம். தாலுக்கா மற்றும் அரசு அலுவலகங்களில் எம்.எல்.ஏ.க்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதை தடுக்கவும், கனிமவள கொள்ளை தடுக்கவும் ஆட்சிக்கு வர நினைக்கிறோம். விவசாயம் செய்ய நிலத்தை அதிகரிப்போம் என சொன்ன திமுக இதுவரை எதுவும் செய்யவில்லை.
கோவை மாநகராட்சியில் 3327 கோடி வரிகள் மூலம் வருமானம் வருகிறது. மேலும், 350 கோடி சொத்துவரி உயர்வால் கிடைத்துள்ளது. ஆனால், கோவைக்கு எதுவும் செய்யவில்லை. கோவையில் தெருநாய்கள் தொல்லை, குண்டும் குழியுமான சாலைகள் உள்ளன.
அமைச்சர்கள், பெண் மேயரை அடிமையாக நடத்துகிறார்கள். வீட்டில் வேலை பார்ப்பவரை போல் பெண் மேயரை ஒருமையில் அழைக்கிறார்கள். ஆர் எஸ் பாரதி பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியிருக்கிறார். அமைச்சர் ராமச்சந்திரன் நரிக்குறவ பெண்ணை அவமானப்படுத்துகிறார். ராஜகண்ணப்பன் தாழ்த்தப்பட்ட அதிகாரியை மிரட்டிய வழக்கும் நிலுவையில் இருக்கிறது. பேருந்தில் ஓசியில் போகிறீர்கள் தானே என்று அமைச்சர் பொன்முடி பேசுகிறார்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக, பாஜக நிர்வாகிகளை கைது செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. திமுக எம்.எல்.ஏ தாம்பரத்தில் தொழிலதிபரை மிரட்டிய சம்பவத்தில் அவர் மீது எப்.ஐ.ஆர் மட்டும் போட்டு விட்டு விட்டார்கள். ஆனால், அவரை கைது செய்யவில்லை.
கேரள முதலமைச்சர் கோல்டு ஸ்மக்ளிங் கேடி பினராயி விஜயன் தமிழக முதலமைச்சரோடு சேர்ந்து முல்லை பெரியார் விஷயத்தில் மக்களை ஏமாற்றி வருகிறார். பரம்பிக்குளம் அணையில் ஒரு மதகு உடைந்து 6 டி எம் சி தண்ணீர் வீணாக போகிறது. பரம்பிக்குளம் அணையில் சரியாக பராமரிப்பு செய்யவில்லை.
ஒரு கோடி ரூபாய் அந்த அணையை பராமரிக்க செலவாகும் நிலையில், வெறும் 15 முதல் 20 லட்சம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. மீதம் 80 லட்சம் ரூபாய் கமிஷனாக போய்விட்டதால் தண்ணீர் வீணாகியுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திற்கு குடிநீர் பற்றாக்குறை வரும் அபாயம் உருவாகியுள்ளது.
சிறுவாணியில் 40 அடிக்கு மேல் தண்ணீர் உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது. கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் கலெக்ஷன், சோலார் மின்சாரம் போட கமிஷன், மாநகராட்சி டெண்டர்களுக்கு கமிஷன், தென்னை நார் தொழிற்சாலைகளை ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்றிவிட்டு அதிலும் கமிஷன், கட்சிக்குள் பதவி வாங்க பணம், ஏற்றிய மின்சார கட்டணத்தை குறைக்க காசு என கோவை சொத்தை சுரண்டி சுரண்டி கோபாலபுர குடும்பத்தை வளப்படுத்த நினைக்கிறார்.
கடந்த 1966ம் ஆண்டு ராமாயணம் எதிர்ப்பு போரட்டம் நடத்தினர். ராமனை வைத்து அடுத்த 15 ஆண்டுகள் அரசியல் செய்தனர். இன்றைக்கு உலகம் முழுவதும், கம்பன் கழகம் இருக்கிறது அதற்கு காரணம் திமுக தான். அதே போல, சனாதன தர்மத்தை பட்டி தொட்டியெல்லாம் திமுகவினர் கொண்டு செல்கிறார்கள். இப்போது சனாதன தர்மத்தின் மீது கை வைத்திருக்கிறார்கள்.
எங்கள் மீது கைவைத்த காவல் துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் பணி ஓய்வு பெறும் போது பென்சன் பணம் கிடைக்கவில்லையென்றால் நாங்கள் பொறுப்பல்ல. 99 சதவீத காவலர்கள் நேர்மையானவர்கள். ஆளும் அரசுக்கு அடிமையாக இருக்க மாட்டேன் என்று கூறும் காவல்துறையினரும் உள்ளனர்.

இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள். பா.ஜ.க தொண்டர்கள் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவார்கள். அதனை செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை.
முதலமைச்சர் நடுநிலையாக நடந்துகொள்ளும் வரை பாஜக விடாது. ஐந்தாண்டுகள் ஆட்சியை நல்லபடியாக முடித்துவிட்டு செல்லுங்கள். நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பது உங்கள் கையில் தான் உள்ளது, என தெரிவித்தார்.